பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

720 நினைவு அலைகள் டாக்டர் செரியனுக்கு நீங்கள் அறிமுகமாகாதவர் என்றால், உங்களைப் பெயர் சொல்லி - அதுவும் தலைப்பெழுத்துக்களையும் சொல்லி - பதினைந்து நாள்கள், மாலை நான்கு மணிக்கு வந்து உதவும்படி, இயக்குநரிடம் எப்படிக் கேட்டார்?' என்று மடக்கினார். அது எனக்கும் புதிராகவே இருந்தது. திகைத்தேன். தழதழத்த குரலிலே, 'அய்யா! நான் தங்கள் நேரடி ஆணைக்கு உட்பட்டவன்; தாங்கள் போகச் சொன்னால் போகிறேன்; இல்லை என்றால், போகாமலிருந்து விடுகிறேன்' என்று பணிவோடு கூறினேன். 'சென்னையில் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உங்களைக் குறிப்பிட்டு, வரச் சொல்வானேன்? அத்தனை நாள்கள் நீங்கள் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தால் அலுவல் கெட்டுவிடுமே. 'அதைச் சொல்லி மறுத்தால், போர் ஆதரவு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறேன், என்ற பழி வந்துவிடும்; மேலிடத்து ஆணையை நிறைவேற்றி விடுவதே நல்லது. 'அவர்கள் விரும்புகிறபடி நாள்தோறும் சென்று உதவுங்கள். ஆனால், உங்கள் அலுவலில் குறையோ, தவக்கமோ, ஏற்படக் கூடாது. அதை ஒழுங்காகச் சமாளித்துக்கொண்டு, இப்பணியையும் செய்யுங்கள்' என்றார். என்னை அழைத்ததைப் பற்றி என் மேலதிகாரி ஏன் அவ்வளவு எரிச்சல் கொண்டார் என்பது எனக்கு விளங்கவில்லை. விளங்காத பலவற்றோடு வாழ்ந்து ஆகவேண்டுமே! அதற்கு முதற் பயிற்சிபோல் அது அமைந்தது. குறிப்பிட்ட நாள்களில், நான் கலைக்கூடம் சென்றேன். பொம்மலாட்டத்திற்கு விளக்கம் கூறினேன்; புதுத்திறமை ஒன்றைப் பெற்றேன். அப்பணிக்குச் சென்றபோது, முதல்நாள் அன்றே சிற்றுண்டி அருந்த 'காசுச்சீட்டுகள் கொடுத்தார்கள். பொருட்காட்சிச்சாலைக்குள் செயல்பட்ட சிற்றுண்டிச் சாலையில், சீட்டுகளைக் கொடுத்துவிட்டு, வேண்டியதை வாங்கி உண்ணலாம். இப்படிச் சொல்லி என்னிடம் ஒரு கட்டுக் காசுச் சீட்டுகளைக் கொடுத்தார்கள். மரியாதைக்காக அதைப் பெற்றுக் கொண்டேன்; ஆனால் பயன்படுத்தவில்லை. காட்சியின் இறுதிநாள் அக்கட்டுகளை உரியவரிடம் கொடுத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/761&oldid=787764" இலிருந்து மீள்விக்கப்பட்டது