பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 727 காத்திருந்த இடத்தில், அறுவர் மட்டுமே இருந்தோம். அய்வர், ஆசிரியப் பணியில் இருந்தார்கள். நான் ஒருவனே வகுப்பு அறைகளுக்கு அப்பால், நிர்வாகப் பணியில் செயல்படுவேன். குண்டுவிழாமல் இருந்தால், நான் தேர்ந்து எடுக்கப்படுபவன் என்ற நம்பிக்கையோடு அமர்ந்திருந்தேன். அகர வரிசையில் அழைக்கப்பட்டோம். என் முறை வந்தது; உள்ளே நுழைந்தேன்; பொதுப்படையாக வணங்கினேன்; நாற்காலியைச் சுட்டிக் காட்டினார்கள்; இருந்தேன். அக்காலத்தில், அரசு ஊழியர்களைப் பொறுக்கும் ஆணையத்தில் மூவர் இருந்தனர். தலைவர், திரு. ஆல், அய்.சி. எஸ். உறுப்பினர்கள் இருவர். அவர்கள் பெயர் என்ன? திரு. எம். இரத்தினசாமி, திரு. அனந்தாச்சாரி. திரு. ஆல், விமானப் பாதுகாப்பு அணியில் பெரிய பொறுப்பில் இருந்தார். மாவட்டக் கல்வி அலுவலரைத் தேர்ந்தெடுக்கும் பேட்டியின் போது அவர் வரவில்லை. அதை உணர்ந்ததும் அவநம்பிக்கைக் கோடு மின்னிற்று. அடுத்த நொடி, திரு. அனந்தாச்சாரி, கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். என்ன வேலை யில் இருக்கிறேன்? அதற்கு முன்பு எப்பணிபுரிந்தேன்? அந்தந்த வேலைக்கான ஊதிய அளவு என்ன? இவை கேள்விகள். இவற்றிற்குப் பதில் சொல்லத் திறமையா வேண்டும்? உரிய பதிலை அமைதியாக உரைத்தேன். தாக்கும் கேள்வி இமைப்பொழுதில், தாக்கும் கேள்விகள் வெடித்தன. தயக்கமின்றிப் பதில்களும் வெளிப்பட்டன. 'இளைஞரே! நீர் எவ்வளவு சிறியது கிடைத்தாலும் போதுமென்ற நிறைவு கொள்வீர் என்று தோன்றுகிறது. அப்படித்தானா? ' 'உண்மையல்ல அய்யா. 'பொருளியல் சிறப்புப் பட்டத்தில் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது இடத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்; இருப்பினும் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்திற்கு, தமிழ்நாடு நாளிதழில் உதவி ஆசிரியராக ஒப்புக்கொண்டீர். அதைவிட்ட பிறகும் திங்களுக்கு நாற்பத்தைந்தே கிடைக்கும் உதவிப் பஞ்சாயத்து அலுவலராக இசைகிறீர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/768&oldid=787771" இலிருந்து மீள்விக்கப்பட்டது