பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/770

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 729 தன் கையில் இருந்த கோப்பொன்றை அடுத்து அமர்ந்திருந்த, பொதுக்கல்வி இயக்குநர், திரு. மெவரல் ஸ்டேதம் அவர்களிடம் நீட்டினார். இயக்குநர், இரண்டொரு மணித்துளிகள் கோப்பைப் புரட்டினார். தாம் ஏதும் கேட்க விரும்பவில்லை என்றார். அது என் காதில் விழவும் என் நாடி நரம்புகள் தளர்ந்து விட்டன. இயக்குநர் என்பால் சீற்றங்கொண்டு இருப்பார் என்று கருதினேன். திரு. அனந்தாச்சாரி மீண்டும் கேள்விகளைக் கேட்டார். 'உமக்கு நிலபுலம் இருப்பதாகவும் அது அய்ம்பதாயிரம் ரூபாய்களுக்கு இருக்கலாமென்றும் மனுவில் குறித்திருக்கிறீர். அது குறைந்த மதிப்பீடாகத் தோன்றுகிறதே என்றார். 'அதில் குறித்துள்ள நிலப்பரப்பு சரியானது. விலை மதிப்பு சரியாக இருக்குமென்று சொல்லமுடியாது. எங்கள் ஊரில் நிலத்தை விற்பதும் வாங்குவதும் அடிக்கடி நிகழ்வதில்லை. ஆகவே இப்போதைய மதிப்பீடு தெரியாது' என்று பணிவோடு சொன்னேன். 'ஓர் இலட்சத்திற்குக் குறையாது. உங்கள் பக்க நிலவரம் எனக்குத் தெரியும். நீ நினைத்துக் கொண்டிருப்பதைவிட, நீ அதிகப் பணக்காரன்' என்றார். கேட்டு மகிழ்ந்தேன். வெளியே வரும்போது, பணியாளர் பொறுக்கு ஆனையகத்தில் அலுவலராக இருந்த திரு. டி.டி. அய்யாசாமியைக் காணும்படி நேர்ந்தது. அவர் பேட்டி பற்றிக் கேட்டார். 'அனந்தாச்சாரியின் கேள்விக்கு, எரிச்சல் ஒலியில் பதில் சொல்லிவிட்டேன்; இயக்குநர் கேள்வியே கேட்கவில்லை : சினங்கொண்டார் போலும். நான் தேர்ந்தெடுக்கப்படுவேனா என்பது கேள்விக்குறி; இருக்கிற வேலைக்கே இடையூறு வரக்கூடாதே என்று கலங்குகிறேன்' என்று ஒப்பாரி வைத்தேன். 'சிறிய வேலைக்கல்ல பேட்டி; பெரிய பதவிக்கே, மாவட் அலுவலர் பதவிக்கே உன்னைப் பேட்டி கண்டார்கள். மாவட்டப் பொறுப்பில், சில வேளை வெடுக்கென்று பதில் சொல்லியே, நிலைமையைச் சமாளிக்க நேரிடலாம். அது, உன்னால முடியுமா என்று அளக்க, எரிச்சலூட்டும் கேள்வியைக் கேட்டிருக்கலாம். உளந்தளாத் தேவையில்லை; நல்லது நடக்கட்டும்' என்று ஆறுதல் கூறி அனுப்பினார். பேட்டிக்குப் பின், ஜப்பானியக் குண்டின்மேல் என் நினைவு பாய்ந்தது. அதே நினைப்பில் நாள் முழுவதும் கழிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/770&oldid=787774" இலிருந்து மீள்விக்கப்பட்டது