பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/775

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

734 நினைவு அலைகள் சான்றிதழை அனுப்பிவிட்டு, ஏறத்தாழ ஒரு திங்கள்போல் காத்திருக்க நேர்ந்தது; சலிப்புத் தட்டியது. மாவட்டக் கல்வி அலுவலர் பதவியைப் பற்றி மறக்க முயன்றேன். அந்த நிலையில், ஒரு நாள் முற்பகல், சென்னை சூளைப்பகுதியில், ஒரு சிறுவர் தொடக்கப்பள்ளியை ஆண்டுத் தணிக்கை செய்து கொண்டிருந்தேன். திரு கிருஷ்ணமூர்த்தி அய்யர், அன்று மயிலாப்பூரில் ஒரு தொடக்கப் பள்ளியைத் தணிக்கை செய்து கொண்டிருந்தார். ஆய்வாளருக்கு வந்த அஞ்சல்கள் அந்தப் பள்ளிக்குக் கொண்டு போகப்பட்டன. பள்ளித் தணிக்கையின்போதே பிரித்துப் பார்த்தார். என்னை மாவட்டக் கல்வி அலுவலராகத் தேர்ந்தெடுத்திருப்பதாக ஒர் அரசு ஆணை கூறிற்று. அது பொதுக்கல்வி இயக்குநர் வழியாக வந்திருந்தது. கோவையில் பணி அதை அனுப்பிய இயக்குநர், நான் நான்கு திங்கள் முன் பயிற்சிக்காக, கோவை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் போய்ச் சேரவேண்டும் என்று கட்டளை இட்டிருந்தார். இயக்குநர் அலுவலகத்தின் ஒர் அறையில் அலுவல் பார்த்த என்னிடம் எவரும் இதுபற்றி மூச்சு விடவில்லை. குற்றம் மற்றவர்களுடையது அல்ல; உரியவர்களிடம் நாள்தோறும் சென்று, கால்கடுக்க நிற்காதது என் குற்றமே. ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அய்யர், அரசு ஆணையை, அடுத்த நொடியே ஆள் வழியாக, சூளைப் பள்ளிக்கு அனுப்பி, என்னிடம் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்தார். அய்யர் என்னைப் பாராட்டி எழுதி அனுப்பி இருந்தார். அதோடு எனக்கு ஆலோசனையும் கூறியிருந்தார். ‘'எதிர்காலம் பற்றி நமக்குத் தெரியாது. ஒருநாள் தாமதம் கூட இடையூறாகவோ, நன்மையாகவோ முடியலாம். அடுத்த வண்டியேறி, கோவைக்குச் சென்று, புதிய பதவியில் சேர்வது நல்லது. எனவே, உங்களை விடுவிக்க ஆணை போட்டிருக்கிறேன். 'உடனே, அலுவலகம் சென்று, அதற்குரிய நமூனாவில் பதவியை என்னிடம் ஒப்படைத்ததாகக் கையெழுத்துப் போட்டு விடுங்கள். பிறகு, நான் கையெழுத்திட்டு, மேலுக்கு அனுப்பிவிடுகிறேன் என்று எழுதியிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/775&oldid=787779" இலிருந்து மீள்விக்கப்பட்டது