பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நினைவு அலைகள் - _ தொடங்கினோம். இருட்டுவதற்கு முன் ஒரு வாரப் பாடத்தை முடித்து விட்டோம். வீட்டுக்குப் போகவிட்டார். மகிழ்ச்சியோடு வீடு திரும்பினோம். வழியில் மீண்டும் கும்பிட்டுவிட்டு வீடு சேர்ந்தோம். தனிப் பாடமுறை அடுத்த இரு சனிக்கிழமைகளில் தொடர்ந்தது. ஆனால், திரும்பப் படிப்பதை, பகல் உணவுக்கு முன்பே முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து விட்டோம். காலத்தினால் செய்த உதவி கடைசி சனிக்கிழமை. நாங்கள் வீடு திரும்பப் புறப்பட்டபோது 'பயல்களா, நீங்கள் இப்போது வேர்ப் பிடித்து விட்டீர்கள். இனிமேல் நன்றாகப் படித்துவிடுவீர்கள். ஆனால், எப்போதாவது என் உதவி தேவைப்பட்டால் தயங்கி நிற்காதீர்கள். போகலாமா என்று யோசிக்காதீர்கள். உங்கள் வீடு மாதிரி வாருங்கள். நான் இருக்கிறேன் சொல்லிக் கொடுக்க' என்று கனிவாகச் சொல்லியனுப்பினார். கல்வி மருத்துவர் வைத்தியநாத சாமி அய்யர். அப்புறம்? 'நம் வைத்திநாதசாமி அய்யர் இருக்க நமக்கேன் பயம் என்று தெம்போடு படித்தோம். பின்னர் அவரிடம் தனிப்பாடங் கேட்கத் தேவை ஏற்படவில்லை. ஐவர் கல்வியும் நன்கு பச்சை கட்டிற்று. ஐவரும் வகுப்பில் தேர்ச்சி பெற்றோம். 'வாங்கும் சம்பளத்திற்கு வகுப்பறையில் பாடஞ் சொல்லுதல். மக்கள் தொண்டாகத் தனிப்பாடம் என்ற நல்ல உயரிய கோட்பாட்டோடு, என் ஆசிரியர் பணியாற்றியதால், நான் கல்வியில் வேர் ஊன்றி நன்கு வளர வழி ஏற்பட்டது. 'காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது என்னும் குறள் அன்று எனக்குத் தெரியாது பின்னர் கற்றேன். பல்லாண்டுகளுக்குப் பிறகு இந்தக் குறளின் ஆழ்ந்த பொருளை உணர்கிறேன். அதை இன்னும் எண்ணி எண்ணி மகிழ்கிறேன். வளர்க வைத்தியநாதசாமியின் நல்ல மரபு. அப்படித் தனிப் பாடம் சொல்லிக் கொடுத்ததற்கு ஊதியம் ஏதும் அவர் கேட்கவில்லை. நாங்களும் அவருக்கு உண்மையில் ஒன்றும் கொடுக்கவில்லை. 'உண்டால் அம்ம இவ்வுலகம்.... பிறர்க்கென முயலுநர் உண்மையானே' என்னும் புறநானூற்றுச் செய்யுள், எத்துணையைப் பொதிந்து வைத்துள்ளது. இது மேடையில் ஒலிக்கிறது: எழுத்தில் மின்னுகிறது; உள்ளத்தில் ஊன்றி விட்டால்....? அல்லல் ஏது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/82&oldid=787788" இலிருந்து மீள்விக்கப்பட்டது