பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ίλ

ஏழைகளின் பங்காளர் காமராசரின், கல்வி வளர்க்கும் பேரியக்கத்தில், முதல் தொண்டனாகச் செயல்படும் நற்பேறு என் சிந்தனையையும் செயற்பாட்டினையும் உயர் மட்டத்திற்குக் கொண்டு சென்றது. பெருந்தலைவர் என்னிடம் வைத்திருந்த நம்பிக்கை தனி வாழ்க்கை இடிகளைத் தாங்க உதவிற்று.

அறிஞர் அண்ணா, என்பால் கொண்டிருந்த நம்பிக்கை எனது வாழ்க்கையின் கசப்பைப் போக்க உதவிற்று.

அதே போல், டாக்டர் கலைஞர் கருணாநிதி காட்டிய ஆதரவு சென்னைப் பல்கலைக் கழகத்தைக் கட்டிக் காக்கவும், புதுப் பொலிவு ஊட்டவும் உதவிற்று.

முதல் அமைச்சர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் என்பால் காட்டிய அன்பு என்னை முதுமையிலிருந்து காக்கிறது.

இத்தகைய பெரியவர்கள் வாயிலாகக் காலமும் சமுதாயமும், பெரும் பொறுப்புகளையும் வாய்ப்புகளையும் உரிமைகளையும் வழங்கின. அப் பொறுப்புகளை நிறைவேற்றுகையில் இடர்ப்பாடுகளும் உண்டு; உதவிகளும் உண்டு.

ஏழைக்கு எழுத்தறிவிக்கும் அறப்பணியில் சமுதாயப் பணியில் முன்வந்து உதவியோர் ஏராளம். எத்தனை நல்லோரின் நன்கொடைகள், பகல் உணவாக, சீருடையாக, பள்ளிச் சீரமைப்பாக உருவெடுத்தன. அந்நிகழ்ச்சிகளைப் பற்றிய நினைவுகள் அமுதமாக வாழ்விக்கின்றன.

என்னிலும் இனியார், என்னிலும் கற்றார், என்னிலும் ஆற்றல் மிக்கார், எனினும் தன்னை மறந்து - தன் நாமம் கெட்டு, என்னையே எல்லாமாகக் கருதி, எனக்காகவே வேதனைகளையெல்லாந் தாங்கி 22.11.84வரை வாழ்ந்த-தியாகி-காந்தம்மாவை, எனது வாழ்க்கைத் துணைவியாக - எனது தனிச் செயலராக - செய்தித் தகவல் வாயிலாக பாதுகாவலராகப் பெற்றது, பெரும் பேறு ஆகும்.

பாடுபட்டு வளர்க்க வேண்டியவை பல. அவற்றில் ஒன்று நன்றியுணர்வு. எனது நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ எளியோர்க்கு, அறிஞர்களுக்கு, பெரியவர்களுக்கு, நல்லவர்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கின்றேன். அவற்றை ஆங்காங்கே சொல்லி, நன்றிப் பயிரை வளர்த்தல் எனது கடமை. அப்பெரு நோக்கை மையமாகக் கொண்டே ‘நினைவு அலைகள் வீசுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/11&oldid=622963" இலிருந்து மீள்விக்கப்பட்டது