பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 நினைவு அலைகள்

வேலைப் பளுவும் பெரியவர்களின் அழுத்தமும் பல கல்வி அதிகாரிகளை அச்சமூட்டி அனுப்பியுள்ளன.

எனக்கு முந்தைய மாவட்டக் கல்வி அதிகாரிகள் பத்துப் பேர்களில் ஒருவர் மட்டுமே ஆறு திங்கள்வரை தாக்குப் பிடித்துத் தங்கியுள்ளார். மற்றவர்கள் மூன்று, நான்கு திங்களில் விடுப்பு போட்டு விட்டுப் போய்விட்டார்கள்.

அத் தகவலைத் தெரிந்துகொண்டபோது நான் அஞ்சவில்லை, மாறாக அதை அறைகூவலாக ஏற்றுக்கொண்டேன்.

‘ஒவ்வோர் விவகாரத்தையும் அதன் தரத்திற்கு, நியாயத்திற்கு ஏற்ப முடிவு செய்வோம்; தொடர்புடையவர்கள் எவ்வளவு பெரியவர்கள் என்பதைப் பற்றி நினைக்க மறுப்போம்’ என்று எனக்குள்ளே முடிவு செய்து கொண்டு செயல்பட்டேன்.

அப்போது மதுரை மாவட்ட ஆட்சிக் குழுவின் தலைவர் பட்டிவீரன்பட்டி திரு. டபிள்யு.பி.ஏ. செளந்தரபாண்டியன் அவர்கள்.

அவர் 1929 இல் செங்கற்பட்டில் நடந்த முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர்.

ஆதிதிராவிடர் பேருந்தில் செல்ல உரிமை

அவர் ஒருமுறை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் குழுவின் தலைவராக இயங்கினார்.

அக் காலத்தில் பேருந்து வண்டிகளுக்கு உரிமம் கொடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சிக் குழுவிடம் இருந்தது.

அதனிடம் உரிமம் பெற்று ஒடிய பேருந்துகள் சிலவற்றில் ஆதிதிராவிடர்களுக்கு இடம் இல்லை என்று நிர்வாகிகள் சிலர் அறிவித்தார்கள்.

திரு. செளந்தரபாண்டியன் தாமதம் இன்றித் தலையிட்டார் ஆதிதிராவிடர்களை ஏற்றிச்செல்ல மறுக்கும் பேருந்து வண்டிகளின் உரிமம் இரத்து செய்யப்படுமென்று எச்சரிக்கை விடுத்தார்.

அது பயன்பட்டது; ஆதிதிராவிடர்கள் அப் பகுதி பேருந்துகளில் பயணம் செய்ய உரிமை பெற்றார்கள்.

அவர் மதுரை மாவட்ட ஆட்சிக் குழுத் தலைவராக இருந்தபோது, நான் அங்கு - மதுரைக்குப் போய்ச் சேர்ந்தேன்; அவரைக் கண்டு பேசினேன்.

சேலத்தில் ஊரார் நிதி உதவியைப் பெற்றுப் புதிய உயர்நிலைப் பள்ளிகளைத் தொடங்க உதவியதைப் பற்றிக் கூறினேன். அவருக்கு அந்தத் திட்டம் பிடித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/220&oldid=623121" இலிருந்து மீள்விக்கப்பட்டது