பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 நினைவு அலைகள்

கிடக்கக் கூடும். கொண்டு போகவும் திருப்பி அனுப்பவும் ஆகும் செலவு நாற்காலியின் செலவிற்குமேல் ஆவதும் உண்டு.

செலவு ஒருபுறம் இருக்க, காலதாமதம் பெரிது. பல பொருள்கள் ஈராண்டிற்குமேல் பழுது பார்க்கப்படாமல் கிடந்தன.

ஆசிரியர்களுக்கோ மாணவர்களுக்கோ உட்கார வசதியில்லாத தொல்லை; பள்ளியில் இடம் அடைப்பு.

இலட்சக் கணக்கான ரூபாய் மதிப்பு உள்ள பொருள்கள் இப்படிப் பயன் அற்றுக் கிடந்தன.

அதே நேரத்தில் ஏறத்தாழ பதினைந்து மாநகராட்சிப் பள்ளிகளில், தச்சுவேலை பாடத்திட்டப்படி கற்றுக் கொடுக்கப்பட்டது. தச்சு ஆசிரியர்கள் இருந்தார்கள்.

அந்தப் பள்ளிகளில் உடைந்துபோன மரப் பொருள்களைக் கூட அடைத்து வைத்திருந்தார்கள். ஏன்?

மையப் பட்டறைகளுக்கு அனுப்பும்படி ஆணையிருந்ததால்.

தச்சு ஆசிரியர்கள் பழுது திருத்தினார்கள்

இம்முறையை மாற்றக் கருதினேன். முதலில் இரண்டு மூன்று தச்சு ஆசிரியர்களின் ஒத்துழைப்பைப் பெற்றேன்.

அந்தப் பள்ளிகளின் மேசை, நாற்காலி, கரும் பலகை போன்றவற்றை தச்சுப் பயிற்சியின் ஒரு கூறாகப் பழுது பார்த்துக் கொடுத்தார்கள்.

மாணவர்களும் அதில் ஆர்வம் காட்டினார்கள். அதில் பெருந் தொல்லையில்லை என்பது புலனாயிற்று.

மற்ற தச்சு ஆசிரியர்களும் அப்படியே செய்ய முன்வந்தார்கள். அந்த ‘தன் உதவி முயற்சி மேலும் வளர்ந்தது.

அக்கம் பக்கத்துப் பள்ளிகளில் ஏற்படும் சாதாரணப் பழுதுகளைச் சரிசெய்து கொடுக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்கள்.

உடனுக்குடன் பொருள்கள் பழுது பார்க்கப்பட்டதால் மையப் பட்டறைகளிலோ, பள்ளிகளிலோ குவிதல் குறைந்தது.

இதைக் கூர்மையாகக் கவனித்த, எழும்பூர் தொகுதி மாநகராட்சி உறுப்பினர், பாரிஸ்டர், இராசகோபால அய்யர், என்னைத் தேடி வந்து பாராட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/292&oldid=623208" இலிருந்து மீள்விக்கப்பட்டது