பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 நினைவு அலைகள்

முடிவு சொல்ல ஒருநாள் தவணை கேட்டேன். அன்று மாலை, குடும்பத்தோடு கலந்து ஆலோசித்தேன். இயக்குநர் வழிகாட்டல் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தோம். அடுத்த நாள் அலுவலகம் சென்றதும் இயக்குநரைக் கண்டு கார் வாங்க இசைவதாகக் கூறினேன்.

உள்ளூர் விற்பனையாளரை அழைத்தார். உரிய கடிதங்களைப் பார்த்து, என்னைக் கையெழுத்திடச் சொன்னார்.

பிறகு.?

கார் வாங்க, முன்பணம் தரும்படி அரசைக் கோரும் என்கடிதத்தைப் பெற்று அதன்மேல் பரிந்துரைத்தார்.

திரு. ரெட்டியாருக்கு இருந்த நன்மதிப்பால் அதுவும் பலித்தது.

அவதூறு பிறந்தது

இப்படியிருக்கையில் இரண்டொரு நாள்களில், நான், பாரிஸ் மாநாட்டிற்குப் போகும் செய்தி, நாளிதழ்களில் வெளியாயிற்று; இரண்டொரு வரிகளில் அந்தச் செய்தி அடங்கிவிட்டது. சிறு எழுத்துகளில் வெளிவந்த அதைப் பாராதோரே அதிகம்.

இருந்தால் என்ன? குண்டுமணியைக் குன்றாகக் காட்டி, அதோடு எதை எதையோ இட்டுக் கட்டி, வகை வகையான பகைகளை வளர்ப்பதற்கென்றே நம்மில் சிலர் வாழ்கிறார்கள்.

அவர்களில் ஒருவர், எவருக்கோ கொடுத்த தேனிர் விருந்தில், மேற்படி செய்தியை இழுத்து வைத்தாராம்.

‘அமைச்சர் பக்தவத்சலம் சாதிப்பற்றின் காரணமாக நெ.து.சு.வை பாரிசில் நடைபெறும் உலகக் கல்வி மாநாட்டுக்கு அனுப்பச் செய்துவிட்டார்.

‘இவ்வளவு பெரிய மாநிலத்தில், நெ.து. சு. ஒருவர் மட்டுமா கிடைத்தார்: ‘

‘நாமும் அத்தகைய சாதி உணர்வோடு செயல்படவேண்டும். நம் சாதியாரையே எல்லாவற்றிற்கும் பரிந்துரைக்கவேண்டும் என்று சாதி வெறி ஊட்டிப் பேசினாராம்.

இவர் எம்.ஏ. படித்தவர். கைகட்டிப் பணிபுரிய விரும்பாததால், தலைமை மோகத்தால் பொது வாழ்க்கைக்கு வந்தவர். மாநகராட்சியில் நான் அலுவல் பார்த்தபோது, என்னோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/338&oldid=623259" இலிருந்து மீள்விக்கப்பட்டது