பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரு. து. சுந்தரவடிவேலு 347

‘முன்னர் நீங்கள் கூறிய தவனை தீர்ந்து இரண்டு நாள்கள் ஆகிவிட்டன. இப்போது இப்படிச் சொல்லலாமா?

‘உரிய காலத்தில் காரை வாங்கினால்தான், குறிப்பிட்ட குறைந்த காலம் வரையாவது அதைப் பயன்படுத்த இயலும், அதைக்கொண்டு வரிச்சலுகை பெற முடியும்.

‘'காலந்தாழ்த்திக் கிடைத்தால் வரிச்சலுகையை இழக்க நேரிடும். உங்கள் பதில் எனக்கு வேதனையூட்டுகிறது’ என்று சிடுசிடுப்போடு பேசினேன்.

‘தவனை நாளைக் குறிக்கும் சீட்டைக் காட்டுங்கள் பார்க்கலாம்.’ என்று அலுவலர் என்னை மடக்கப் பார்த்தார்.

அவருடைய வயது இருபத்தைந்துக்குள் இருக்கும். ‘நாங்கள் ஆங்கிலேய ஆட்சியளித்த ஆங்கிலக் கல்வியைக் கற்றவர்கள். ஆங்கிலேயர் ஒருவர், எழுத்துவழி ஒப்புக்கொண்டால் என்ன மதிப்பு உண்டோஅது அவருடைய வாய்ச் சொல்லுக்கும் உண்டு என்று எங்களை நம்ப வைத்திருந்தார்கள்.

‘எனவே, சென்ற முறை உங்களைப் பார்த்து, தவணை நாளைத் தெரிந்து கொண்டபோது, எழுதி வாங்கிக் கொள்ளாமல் போய் விட்டேன்.

‘பழைய தலைமுறை ஆங்கிலேயரின் தன்மை, இளைய தலைமுறை ஆங்கிலேயருக்கு இல்லை என்பது எனக்குத் தெரியாமல் போய் விட்டது’ என்று கடுகடுப்பாகக் கூறினேன்.

அச் சொல் சுருக்கென்று அவருக்குத் தைத்தது போலும். ‘ஒரு மணித்துளி என்று சொல்லிவிட்டு, கார் தொழிற்சாலையோடு தொலைபேசியில் உரையாடினார்.

பின்னர், ‘வேலு, மன்னித்துவிடுங்கள். நாங்கள் சொன்னால் சொன்னதுதான். வரிச்சலுகை பெறப்போதுமான காலம் இருக்கும்படி காரை ஒப்படைத்து விடுகிறோம்; கார் ஒட்டியும் அப்போதே ஆயத்தமாக இருப்பார்’ என்று சொல்லிவிட்டு, அடுத்த வாரத்தில் ஒரு நாளைக் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட நாள் அங்குச் சென்றோம். காரையும் பத்திரங்களையும் என்னிடம் ஒப்படைத்தார்.

அக் கம்பெனி ஏற்பாடு செய்திருந்த காரோட்டி, சில நாள்கள் எங்களிடம் பணிபுரிந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/363&oldid=623287" இலிருந்து மீள்விக்கப்பட்டது