பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 நினைவு அலைகள்

மன்ற அமைப்பாளர்களின் வேண்டுகோளுக்கிசைய, என் உரையை முன்கூட்டியே எழுதிக்கொடுத்தேன். அச்சிட்டு, ஆண்டு விழாவில் வழங்கினார்கள்.

மாணவர்கள் கற்கும் பருவத்தில் கல்வியின்பால் முனைப்பாக இருக்க வேண்டுமென்பது; உரையின் மையமாக அமைந்தது.

அவ்வுரை, சென்னைக்கு அப்பாலும் ஆசிரிய உலகத்தைக் கவர்ந்தது.

எனவே, அடுத்தமுறை எட்டாம் வகுப்புக்கான அரசின் பாட நூலைப் பதிப்பித்தபோது ‘அரிய படிப்பினை என்னும் தலைப்பில் அவ்வுரை இடம் பெற்றது.

அதற்காக நான் ஊதியம் ஏதும் பெறவில்லை என்பதை இங்கே குறிக்கவேண்டும்.

முதல் பொது நூலகச் சட்டம்

மாந்தர் தோற்றுவாயில், தமிழர்கள் மூத்தவர்கள்’ என்பது அறிஞர்கள் அறிந்த ஒன்றாகும்.

அதேபோல் சிந்தனைகளிலும் தமிழர்கள் முன்னோடிகள். பல நல்ல கருத்துகள், நல்ல முயற்சிகள் ஆகியவற்றின் முன்னோடிகள் தமிழர்கள். இத்துறையில், நாம் வேறு எந்தப் பிரிவினருக்கும் பின்னடைந்தவர்கள் அல்லர்.

முதலில் பொது நூலகச் சட்டம் ஒன்றை இயற்றிய பெருமை சென்னை மாகாணத்திற்கே உரியதாகும்.

டாக்டர் அரங்கநாதன் என்ற நூலக அறிஞரின் உந்துதலால், சென்னை மாகாணம் அத்தகைய சட்டமொன்றை இயற்றியது.

பழைய யானையைக்கொண்டு புது யானையைப் பயிற்றுவிப்பது போல், பொதுக்கல்வி இயக்குநருக்கு உள்ள செல்வாக்கு, வாய்ப்பு முதலியவற்றைக் கொண்டு, பொது நூலகப் பணியை வளர்ப்பது எளிதென அப்போது கருதப்பட்டது.

எனவே, பொதுக்கல்வி இயக்குநரே, பொது நூலக இயக்குநர் என்று சட்டம் சொல்லிற்று.

அதன் விளைவாகப் பொது மக்களிடம் படிப்பு ஆர்வத்தை வெள்ளமென வளர்க்க முடியுமென்று எதிர்பார்த்தோம்.

சிறுவர் சிறுமியர்களிடையே படிக்கும் வழக்கத்தை வளர்த்து விட்டால், அது காலமெல்லாம் செயல்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/398&oldid=623325" இலிருந்து மீள்விக்கப்பட்டது