பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 391

பல்லைக் கடித்துக்கொண்டு ஊமையாக இருந்தேன். ஆனால், சும்மா இருக்கவில்லை.

நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியத்திடம் உடனே சென்றேன்.

‘இ.ஆ.ப. (ஐ.ஏ.எஸ்) யைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கப் போவதாக வதந்தி ஒன்று அடிபடுகிறது.

‘அது ஈடுசெய்ய முடியாத தீங்காகிவிடும். கல்வித் துறையைச் சேர்ந்த ஒருவரை இயக்குநர் ஆக்குங்கள். அவருக்கு என் முழு ஒத்துழைப்பையும் அளிக்க உறுதி கூறுகிறேன். கல்வித் துறையை இழிவுபடுத்த வேண்டா மென்பதே என் வேண்டுகோள்’ என்று அவரிடம் தெளிவாகக் கூறினேன்.

அதற்குமேல், நான் எவரையும் தேடி அலையவில்லை.

கோவிந்தராசுலு நாயுடு இயக்குநரானார்

சில வாரங்கள் உருண்டன. அரசு சட்டக்கல்லூரி முதல்வர், திரு. கோவிந்தராசுலு நாயுடுவைப் பொதுக்கல்வி இயக்குநராகவும், பொது நூலக இயக்குநராகவும் நியமித்தது.

அவர் விரைந்து இயக்குநர் பதவியை ஏற்றுக் கொண்டார். எனவே திரு. சதாசிவ ரெட்டி ஒய்வு பெற்று, லைபீரியாவில் இயக்குநர் பொறுப்பு ஏற்கச் சென்றார்.

ரெட்டியாரை நியமித்த யுனெஸ்கோ ஆணையில், அவரே தம் விருப்பப்படி ஒரு துணை இயக்குநரைத் தேர்ந்து எடுத்து, நியமித்துக் கொள்ளலாம் என்றிருந்தது. துணை இயக்குநருக்கும் நல்ல ஊதியம் உண்டு.

யுனெஸ்கோ பதவியை மறுத்தேன்

ஆணையை முதலில் காட்டியபோதே ‘நான் லைபீரியா செல்வ தானால் எனக்குத் துணை இயக்குநராக வந்துவிடு: நல்ல எதிர்காலம் வரும். இங்கிருக்கிறவர்களும் உன்னைத்தேடி அழைப்பார்கள்’ என்று கூறினார்.

தமிழ்நாடு என்னைப்போன்ற ஆர்வமுள்ள கல்வித் தொண்டனுக் காகக் காத்திருப்பது போன்றும் ஏதோ என் பணியால் ஓரளவாவது முன்னுக்கு வந்து விடுவார்களென்றும் தவறான மதிப்பீடு போட்டுக் கொண்டு, லைபீரியாவைச் சிந்திக்க மறுத்தேன்.

லைபீரியா சென்ற பிறகும் திரு ரெட்டியார் எனக்குக் கடிதம் எழுதி அழைத்தார். அதைப் பற்றிக்கொள்ள அப்போது தவறிவிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/407&oldid=623336" இலிருந்து மீள்விக்கப்பட்டது