பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 நினைவு அலைகள்

பார்வைக்குப்பின், அவர்களைக் கன்னிமாரா ஒட்டலில் இறக்கி விட்டு, பகல் உணவருந்த வீடு திரும்பினேன்.

அந்தப் பங்களாவில், உணவுக்கூடம், கீழே இருந்தது. குடியிருக்கும் அறைகள் மாடியில் இருந்தன.

உணவு அருந்தியபின் மாடிக்குச் சென்றேன். அறைக்குள் இருந்த குழந்தை திருவள்ளுவன், தாழ்வாரத்திற்கு ஓடி வந்து என் கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டான்.

அவன் தாயார் வந்து விடுவிக்க, நான் உள்ளே சென்றேன். அவன், தனது தாய் பக்கத்திலிருந்த தாழ்வாரத்தின் கைப்பிடிக் கட்டையைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தான்.

இளங்கன்று, அச்சமறியாது! சிறுவன் இமைப்பொழுதில், கைப் பிடியின் குறுக்குக் கட்டையின்மேல் கால் வைத்தான். ஒற்றைக் காலில் நின்றபடியே, கீழே குனிந்து பார்த்தான். கால் நழுவிற்றோ? கை நழுவிற்றோ?

கண் மூடிக் கண் திறப்பதற்குள், ‘பொத் தென்ற ஒலி கேட்டது. ‘தம்பி! தம்பி!’ என்ற கூக்குரல் கேட்டது. நான் அறைக்கு வெளியே ஒடி வந்தேன். காந்தம்மா, மடமடவென்று, படி இறங்கி ஓடக் கண்டேன். நானும் ஒடினேன். திருவள்ளுவன், காரோட்டி எதிராசுவின் மடியில் கிடந்தான். கடைசிநிலை ஊழியர் ஒருவர், விசிறிக்கொண்டே அருகில் நின்றார்.

என்ன நடந்தது? மாடித் தாழ்வாரத்தின் ஒரம் நின்றிருந்த திருவள்ளுவன் குனிந்து பார்க்கையில், நிலைகுலைந்து குப்புற வீழ்ந்தான்.

உயரமான மாடியிலிருந்து நேரே, தரையில் வீழ்ந்து இருந்தால் எலும்பு நொறுங்கி இருக்கும்.

ஆனால், வெளிக் காயமின்றி எப்படிப் பிழைத்தான்? திருவள்ளுவன் வீழ்ந்த இடத்திற்கு நேர் கீழே, என் ஆஸ்டின் கார், நின்று கொண்டிருந்தது.

காருக்கும் மாடிக்கும் இடையில், பசுங்கொடிகளாலான பூப்பந்தல் தழைத்து இருந்தது.

குப்புற வீழ்ந்த குழந்தையைப் பந்தல் தாங்கிக் கீழே விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/414&oldid=623344" இலிருந்து மீள்விக்கப்பட்டது