பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து. சுந்தரவடிவேலு 401

உரிய மரியாதையோடு, கட்டணம் கொடுக்க முயன்றோம். எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. கட்டணம் பெற மறுத்துவிட்டார்.

‘நொடியில் மருத்துவ மனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்த உதவி ஒன்றே நான் செய்தது. அச் சிறு உதவிக்கு, உங்களிடம் பணம் பெறமாட்டேன்.

‘தாங்கள் ‘ஏழைகளின் அடைக்கலம்’ என்பதைப் பலர் வாயிலாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். -

‘அடிக்கடி, என் உதவியைத் தேட நேரிடாத அளவு, தாங்களும் தங்கள் குடும்பமும் நலமாயிருக்க வேண்டும் என்பதே, என் பிரார்த்தனை. அதையும் மீறி என் கவனிப்புத் தேவைப்படும் போதெல்லாம் ஆள் அனுப்புங்கள்’ என்று கூறி எங்களை அனுப்பி வைத்தார்.

இப்படியும் டாக்டர் இருந்தார்கள்; இருக்கிறார்கள்; வாழையடி வாழையாகத் தொடர்ந்து வருகிறார்கள்.

சில திங்களுக்குப் பிறகு, வேறு காரணங்களுக்காக நான் நுங்கம்பாக்கத்தில் இருந்து செனாய்நகருக்குத் திரும்பி விட்டேன். எனவே, நுங்கம்பாக்கம் டாக்டரின் உதவியைப் பெறும் வாய்ப்பு எனக்கு வரவில்லை.

எனினும், நாங்கள் வேறு டாக்டர்களின் பேருதவியைப் பெற நேர்ந்தது.

குடும்ப மருத்துவர்களுக்கு நன்றி

சோகச்சுமையில் உள்ளம் உடைந்த என் மனைவி, பல்லாண்டுகளாக ஏதாவதொரு நோயால் துன்பப்படுகிறார். அது என்னை அவ்வப்போது மிகவும் பாதிக்கிறது.

சென்னையில் டாக்டர் பி. அனுமந்தராவ், டாக்டர். இரத்தினவேல் சுப்பிரமணியம், டாக்டர் உமாபதி முதலியார், டாக்டர் செல்வபதி, டாக்டர் எம்.எஸ். அமரேசன், டாக்டர் மதன கோபால், டாக்டர் பழனியப்பன், கண் மருத்துவர் டாக்டர் ஆபிரகாம், பல் மருத்துவர் டாக்டர் பி. பி. இராசன், அறுவை மருத்துவர் டாக்டர் பாஸ்கர ஆச்சாரியார், டாக்டர் சாமி சண்முகம், தில்லி டாக்டர் சகானி (சீக்கியர்) ஆகியோர் வெவ்வேறு காலங்களில் விழிப்போடும் திறமையோடும் என் மனைவிக்கே, எனக்கே மருத்துவம் பார்த்து, எங்கள் இருவரையும் பேணி வந்தார்கள். காப்பாற்றி வருகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/417&oldid=623347" இலிருந்து மீள்விக்கப்பட்டது