பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 413

எல்லா வகையிலும் நம்பிக்கைக்குரியவர். அவரை அழைத்து ‘நான் கொடுக்கப்போகும் இரகசியக் குறிப்பை நீங்களே வைத்திருக்க வேண்டும். அது பற்றிய தகவல்களை, எழுத்தர்களுக்குத் தெரியாதபடி, நீங்களே தீட்டிக் கொண்டு வரவேண்டும். அது விரைவாகவும் என் கைக்கு வந்து சேர வேண்டும் ‘ என்று சொல்ல, இயக்குநர் எனக்கு அனுப்பிய இரகசியக் கட்டளையை அவரிடம் கொடுத்தேன்.

அவர் அதைப் படித்துப் பார்த்தார். இது பழைய யோசனை: 1937இல் இராசாசி முதல் அமைச்சரான போதும் இப்படியொரு திட்டத்தைக் கொண்டு வரமுயன்றார்.

‘இயக்குநர், முதலில் எங்காவது வெள்ளோட்டம் பார்த்து விட்டு விரிவு படுத்தலாம், என்று எழுதினார்.

‘முதல் அமைச்சர் அதைப் பாராட்டினார். மாகாணம் முழுமைக்கும் நடைமுறைப் படுத்தும்படி சொல்லவில்லை.

‘அந்தப் பழைய கோப்பு நம் அலுவலக ஆவணக் காப்பிடத்தில் உள்ளது. இரண்டு நாள்களில் கொண்டுவந்து காட்டுகிறேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

52. தூக்கம் கெட்டது

இராசாசியின் நேர்முகக் கடிதம்

பொதுக்கல்வி இயக்ககத்தில் மேற்பார்வையாளர்களில் ஒருவரான திரு. கிருஷ்ணசாமி அய்யங்கார், சொன்னபடி பழைய கோப்பைக் கொண்டு வந்தார். சில இடங்களில் கொடிகளைக் குத்திக் கொடுத்தார். என்ன கண்டேன்?

பிரதமர் இராசகோபாலாச்சாரியார் - தலைமை அமைச்சருக்கும் அப்போதைய பெயர் பிரதமர் என்பதே - பொதுக்கல்வி இயக்குநருக்கு எழுதிய நேர்முகக் கடிதத்தைக் கண்டேன்.

அதில், “தாழ்த்தப்பட்டவர்களும், பின்தங்கியவர்களும் மற்றவர்கள் போல் பள்ளிக்கு வருவது இல்லை. அவர்கள் தொடக்கக் கல்வி பெறுவதற்கு வசதியான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

‘தொடக்கப் பள்ளிகள் அரைவேளை மட்டுமே வேலை செய்தால், அவர்கள் வருகை அதிகரிக்கலாமோ என்று நினைக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/429&oldid=623360" இலிருந்து மீள்விக்கப்பட்டது