பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 நினைவு அலைகள்

வாங்கிப் படித்துப் பார்த்தேன். என் பேச்சை முழுமையாகவும் பேச்சிலிருந்த உணர்வு வெளிப்படும்படியும் வெளியிட்டு இருக்கக் கண்டேன்.

அண்ணன் முகத்தில் வெகுளி கொப்பளித்துக் கொண்டிருந்தது.

கடமையைச் செய்வதில், பிறர் மனம் புண்பட்டால், நான் என்ன செய்ய முடியும்?

சில நாள்கள் ஓடின. ஒரு மாலைப்பொழுது, மகன் திருவள்ளுவனை அழைத்துக்கொண்டு, குத்துசி குருசாமியார் இல்லம் சென்றேன்.

அவர்தமது இயக்க நண்பர்கள் இரண்டொருவரோடு கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தார். அதைக்கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தேன்.

அவர்கள் பேச்சு, ‘குலக் கல்வித் திட்டத்தின் மேல் சென்றது. மூவருமே அதைக் கண்டித்தனர். வீட்டைப் பட்டிமன்றமாக்க விரும்பாது, ஊமையாக இருந்தேன்.

பேச்சின் இடையே, இராசாசி பொல்லாதவர்’ என்று பொருள் படும்படி, குருசாமி கடுமையாகத் தாக்கினார்.

இரர்சாசி நல்லவரே

அப்போது நான்கு வயதும் நிரம்பாத திருவள்ளுவன் குறுக்கிட்டான்.

‘பெரியப்பா நீங்கள் சொல்வது தப்பு, அவர் பொல்லாதவர் அல்ல! நல்லவர்’ என்று அடித்துச் சொன்னான்.

‘உனக்கு எப்படித் தெரியும்?’ என்று மடக்கினார், குருசாமி.

‘எனக்குத் தெரியும் பெரியப்பா? நான், அப்பாவை அனுப்பப் போயிருந்தபோது, அவர் என்னை எவ்வளவு ஆசையாகக் கூப்பிட்டார்; அன்பாகத் தட்டிக் கொடுத்தார். ஆப்பிள் பழங்களும் எனக்குக் கொடுத்தார். குழந்தைகளிடம் அவ்வளவு ஆசையாக இருப்பவர், பொல்லாதவராக இருக்க முடியாது’ என்று ஒரு போடு போட்டான்.

‘'ஊரார் எல்லாம் வேண்டாமென்கிற அரைவேளைப் படிப்பை எடுக்கமாட்டேன் என்று ஏன் பிடிவாதம் காட்டுகிறார்?’ என்று கேட்டார், குருசாமி.

சளைக்கவில்லை திருவள்ளுவன், ‘ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றில் பிடிவாதம். முதலமைச்சருக்குப் படிப்பு பற்றிப் பிடிவாதம்’ என்று, திருவள்ளுவன் பதில் கூறியதைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/448&oldid=623381" இலிருந்து மீள்விக்கப்பட்டது