பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நினைவு அலைகள்.

அதுவே பின்னர் ஆந்திர நாட்டைச் சேர்ந்தவர்கள் எல்லோராலும் அரவம் என்று தமிழை அழைக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது.

ஆனால், தமிழன், தெலுங்குப் பகுதியில் அலுவல் பார்க்கக் கூடாதென்ற கருத்து எனக்குப் பிடிக்கவில்லை. எரிச்சல் சுரந்து பொங்கியது.

மறுநொடி, “பொறுத்தார் பூமியாள்வார்’ என்னும் அமுதப் பழ மொழி என் நினைவுக்கு வந்தது.

‘செவி கைப்பச் சொல் பொறுக்கும் வேந்தன்’ என்று தொடங்கும் குறள் நினைவிற்கு வந்தது.

‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்பதும் போட்டிபோட்டுக் கொண்டு என் சிந்தனையில் மின்னிற்று.

இத்தனையும் சேர்ந்து, என் மனக்கொதிப்பை அடக்கின. எவரோ ஒரு வழிப்போக்கர். அவர் அந்தப் பகுதி தெலுங்கர் அனைவருக்கும் பிரதிநிதி அல்லர்.

ஒருவரை எண்ணி, ஒன்பது பேர்களைப் பகைத்துக் கொள்வது பகுத்தறிவுக்கு ஒப்பாது. பகைப் பயிரைக் காய்ந்துபோக விடுதலே அறிவுடைமை.

குழந்தை பிறக்கும்போது அழுகிறது. அது, நல்லவனாகி வாழ்ந்தால், பிறர் அழ, கண் மூடுவது முறை.

நான் இங்கு வரும்போது, ஏதும் அறியாத ஒருவர் முணுமுணுத்துவிட்டார். நான் இங்குப் பணி புரிந்துவிட்டு, வேறோர் ஊருக்குச் செல்லும்போது, இப் பகுதியினர் அழவேண்டும்.

அதற்கேற்ற வகையில் நற்பணி, அன்புப்பணி, ஆற்றுவேனென்று உறுதி பூண்டேன். அதன்படி நடந்தேனா?

பதவி ஏற்றேன்

மறுநாள் காலை. பத்தேகால் மணிக்கு மாவட்டக் கல்வி அலுவலகம் போய்ச் சேர்ந்தேன்.

அது வாடகைக் கட்டடத்தில் இருந்தது. அது ஒரு மாடிக் கட்டடம். அலுவலர் அறைக்குள் நுழைந்தேன். அய்ம்பது வயதிற்கு மேற்பட்ட ஒருவர் அலுவலர் நாற்காலியில் இருந்தார்.

நம் வழக்கப்படி அவரை இருகரம் கூப்பி வணங்கினேன். அவர் திருப்பி வணங்கினார்; எதிரிலிருந்த நாற்காலி ஒன்றைக் காட்டினார். உட்கார்ந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/64&oldid=623434" இலிருந்து மீள்விக்கப்பட்டது