பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நினைவு அலைகள்

நரம்புகளை ஒவ்வொன்றாக வெட்டிக் கொண்டிருக்கிற ‘புனிதப் பணியில் அல்லவா தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்!

சும்மா வந்ததா, சுதந்திரம்?

நன்றி கெட்ட நாம், புத்தி கெட்டவர்களாகவும் எவ்வளவு காலம் கிடப்பது?

நாம் போகிற போக்கில், இந்தியாவின் விடுதலைக்குப் போராடியவர்கள் ஏதும் அறியாதவர்கள். விடுதலை பெற்றது, போராடியல்ல; வாதாடியே! அழகு ஆங்கிலத்தில் வாதாடியே; நிர்வாகத் திறமையைக் காட்டியே என்றாலும் வாய் பொத்திக் கிடக்கும் காலம் விரைவில் வந்துவிடும். அந்தோ அவலம்!

அன்று பொதுத் தொண்டு ஒரு வருடைய உழைப்பையும் நேரத்தையும் உயிரையும் கேட்ட, போராட்டப்பணி. இன்றோ, விளைந்த கொல்லையில், முடிந்த வரை பறித்துக் கொள்ளும் வாய்ப்பு!

தால முத்து நடராசன் -

தாலமுத்துவும் நடராசனும் சிறைப்பட்டு, அவதிப்பட்டு, உயிர்கொடுத்து, கட்டாய இந்திப் பாடத்தை நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தடுத்து நிறுத்தினார்கள்.

சிவலிங்கம் இராசேந்திரன் உயிர் இழந்ததைக்காட்டிப், பிழைப்பு நடத்துவோர் அவர்கள் குடும்பத்தினர் அல்லர்.

பூவாளுர் பொன்னம்பலனார்

வழி வழி வளத்தோடும் மதிப்போடும் வாழ்ந்த குடியில் பிறந்து, சைவத்தில் பெரும்புலமை பெற்ற, பூவாளுர் அ. பொன்னம்பலனார், எத்தனை ஆண்டுகள் தம் வீட்டுப் பணத்தைச் செலவிட்டு, முழுநேர சாதியொழிப்பு, பகுத்தறிவு சமதர்மப் பணியாற்றிச், சூறாவளியெனச் சுழன்று, பெரு மழையெனப் பேசி, நொடியில் மறைந்த தியாகம் தெரியுமா?

சென்னையில் அவர் மறைந்தபோது, மக்கள் திலகம் எம்.ஜி. இராமச்சந்திரனின் இளகிய மனம் உதவிய வேனில், பொன்னம்பலனார் உடலம் பூவாளுருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அந்த உதவி கிடைத்திராவிட்டால், நினைக்கக் கூசுகிறது! பொன்னம்பலனாரின் நாற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட தியாகத் தொண்டை நினைத்துப் பார்க்கவும் தெரியாத மாக்கள், சமத்துவம் பெறுவது எப்படி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/98&oldid=623471" இலிருந்து மீள்விக்கப்பட்டது