பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ix

நினைவு அலைகள் மூன்றாம் பகுதியின்

முதல் பதிப்பிற்கு டாக்டர் நெ.து.சு. அளித்த

முன்னுரை

'நினைவு அலைகள்' - என் வாழ்க்கை வரலாறு ஆகும். இது மூன்று பகுதிகளாக விரிந்துள்ளது. இவ்வளவு விரிவாகச் சொல்வதற்கு என்ன இருக்கிறது! தற்புகழ்ச்சியாக மாறிவிடாதா?

நான் தன் வரலாறு எழுத விரும்பவில்லை. சத்ய கங்கையின் ஆசிரியர், பகீரதன் பல முறை என்னைத் துண்டி வந்தார். "உங்கள் காலப் பெரியோர்களைப் பற்றி, நேருக்கு நேர் அறிந்தவர்கள் சொல்லாமற் போனால், அது சமுதாயத்திற்கு இழப்பாகும். அந்தக் காலத்துச் சிந்தனையாளர்கள், கிளர்ச்சிக்காரர்கள், சாதனை யாளர்கள், பிற்காலத்தவர்களுக்கு உரமாக அமைவார்கள். எனவே, உங்கள் காலச் சூழல்களையும், சிக்கல்களையும் விளக்கும் வகையில் விரிவாகவே எழுதுங்கள்” என்று அவர் அடிக்கடி ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார். அந்த வலையில் வீழ்ந்தேன். நான் எழுதியுள்ளதைத் தன் வரலாறு’ என்று சொல்வதைவிட நினைவு அலைகளாகக் கருதுவதே பொருத்தமாகத் தோன்றிற்று. அம் முயற்சி என்னை உங்கள் முன் நிறுத்துகிறது.

நினைவு அலைகள் எழுபது ஆண்டுகளின் அலைகளைக் காட்ட முயல்கிறது. அக் கால எல்லையில் கண்ட மாற்றங்கள் பற்பல. அவற்றிற்கு வித்தாக அமைந்த உணர்ச்சிகள், எழுச்சிகள், நடவடிக்கைகள் எண்ணற்றன. ஒவ்வொரு நீர்த்துளியிலும் கதிரவனின் ஒளியைக் காணலாம். ஒவ்வொரு மனிதனிலும் சம காலக் கதிரொளிகளின் வீச்சைக் காணலாம்.

நெ. து. சுந்தரவடிவேலுவாகிய நான், மாந்தர் மாக்கடலில் ஒரு சிறு துளி! வரலாற்றுக் கதிர்கள் என்னைத் தாக்கியுள்ளன. செழுமைப்படுத்தியுள்ளன. பயன்படுத்தியுள்ளன.

திண்ணைப் பள்ளிக்கூடம்கூட இல்லாத சிற்றூரில் பிறந்த என்னை முதுகலைப் பட்டதாரியாக்க உதவியவர் பலராவர். பெற்றோரின் தொலை நோக்கில் தொடங்கிய அம் முயற்சிக்கு உதவிய ஆசிரியர்கள் அனைவருமே நல்லவர்கள். எனினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/11&oldid=480527" இலிருந்து மீள்விக்கப்பட்டது