பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

X

டாக்டர் கள்ளுக்காரன் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்வது நன்றிக் கடன் ஆகும்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், கல்விக்கு இடையூறு இன்றி இந்திய விடுதலைக்கும் தமிழின் மேம்பாட்டிற்கும் சாதி சமத்துவத்திற்கும் பாடுபட்ட ’வனமலர்ச் சங்கத்தையும்’ அது நடத்திய ’பித்தன்' என்ற திங்கள் இதழையும் உலகம் அறிந்து கொள்ள வேண்டாமா? இவற்றைப் பற்றிய தகவல்கள் சில பக்கங்களைப் பிடித்துக் கொண்டன.

கர்ந்தியடிகளின் தலைமையில் பொங்கிய விடுதலை உணர்வு என்னைப் போன்ற பல நூறாயிரம் இளைஞர்களை, நாட்டுப் பற்றாளர்களாக மாற்றியுள்ளது.

பரந்த இந்தியாவின் தென்மேற்குக் கோடியில் வைக்கம் என்ற பேரூரில் நடந்த சமுதாய உரிமைப் போராட்டம், சமத்துவ அலைகளை எழுப்பி வளர்த்தது. அவற்றை விரிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளேன். அப்படி விரித்துக் கூறாவிடின் "இயற்கையில், உரிமை வேட்கை, சமத்துவ உணர்வு ஆகியவற்றைப் பெற்ற அற்புத மனிதன் நான்” என்ற பொய்த் தோற்றத்திற்கு இடம் கொடுத்து விடுவேன்.

வேலையில்லாத் திண்டாட்டத்தால் வாடி வதங்கியவன் நான். அந் நிலையை மாற்ற எனக்கு உதவிய திருவாளர்கள் ஏ. கே. தங்கவேலர், திருவொற்றியூர் டி சண்முகம், வெங்கடசாமி நாயுடு, எம். பக்தவத்சலம், சூணாம்பேடு ஜமீன்தார் அருணாசலம் ஆகியோருக்கு என் வரலாற்றில் இடம் உண்டு.

திருவாளர்கள் ரகுபதி, சங்கரலிங்க தாசு போன்றவர்கள் அரசு அலுவலர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். தன்னிடம் ஊழியம் புரிந்தவன் உயர்வதைக் கண்டு அழுக்காறு கொள்ளாத திருவாளர்கள் கிருஷ்ணமூர்த்தி அய்யர், டி. எஸ். கல்யாண சுந்தரம் பிள்ளை ஆகியோரின் நிழலில் நான் வளர்ந்தேன். அவர்கள் மனநிலை பிறரையும் ஊக்கப்படுத்துவதாக!

முருகேசன், மேகவர்னன், லோகநாதன் என்னும் கடைநிலை ஊழியர்க்ள முதல், தங்கவேலு, வீராசாமி, இராசகோபால் சண்முகம் போன்ற பணியாளர்கள் பரிவோடும் நேர்மையோடும் பணிபுரிந்ததால், நான் என் அலுவலின் பேரில் முழு நாட்டஞ் செலுத்த முடிந்தது.

பொதுக் கல்வி இயக்குநர் பதவியிலிருந்து நான் ஒய்வு பெற்று ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் ஆகப் போகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/12&oldid=480528" இலிருந்து மீள்விக்கப்பட்டது