பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xi

இருப்பினும் அன்று என்னுடைய தனி உதவியாளராக இருந்த திரு. டி. ராமசாமி இன்றும் அவ்வப்போது வந்து, எனக்கு உதவி செய்கிறார்! கைம்மாறு பெற மறுக்கிறார். என்னே அவருடைய பற்றும் பாசமும்!

கல்வித்துறையின் முதல் படிக்கட்டாகிய, இளநிலை பள்ளித் துணை ஆய்வாளர் பதவியில் கால் எடுத்து வைத்த நான் இந்தியாவின் மூத்த பல்கலைக் கழகங்கள் மூன்றில் ஒன்றான சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு உயர்ந்து, ஆறு ஆண்டுகள் பணி புரியும் பேறு எனக்குக் கிட்டிற்று. அதே பல்கலைக் கழகம் 20-9-1983 அன்று திருவாளர்கள் ஆர். வெங்கட்ராமன், சி. சுப்பிரமணியம், எம். ஜி. இராமச்சந்திரன், நோபல் பரிசு பெற்ற என். சந்திர சேகர், எம். ஏ. முத்தைய செட்டியார், ராஜா. ராமண்ணா, டாக்டர். தம்பையா, டி. சி. கோத்தாரி, கா. அப்பாத்துரையார், சீர்காழி எஸ். கோவிந்தராஜன் முதலிய 10 பெருமக்களுடன் இணைத்து, சிறப்பு டாக்டர் பட்டம் அளித்துப் பெருமைப்படுத்திற்று. ஒவ்வோர் நிலையிலும் எனக்குப் பாதுகாவலாக விளங்கி ஊக்கப்படுத்திய பெரியோர்களைக் குறித்து எழுதியுள்ளேன்.

வல்லவர்கள் சிலர், புல்லனைய என்னைப் பயன்படுத்தி முன்னறியாச் சாதனைகளுக்குக் கருவிகளாக இயக்கியுள்ளனர். மூதறிஞர் ராஜாஜி அவர்கள், முதலமைச்சராக இருந்தபோது அவரது சீரிய தலைமையின் கீழ், அவருக்கு நிறைவாக நான் பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றிருந்தேன்.

கல்வி வள்ளல் காமராசர் கல்வி மடை திறக்கவும், எல்லோர்க்கும் கல்வி நீரோடை எட்டவும் செய்வதற்கு எளியேனைப் பயன்படுத்தினார் என்பது வரலாறு. பகல் உணவுத் திட்டம், இலவசச் சீருடைக் கொடை, பள்ளிச் சீரமைப்பு இயக்கம் ஞானத் தந்தைத் திட்டம், இலவச மேற்பார்வைப் படிப்பு முறை முதலிய மின்னாற்றலைக் கொண்டு சென்ற கம்பியாக நான் இருந்தது என் நற்பேறாகும்.

இந்திய ஒருமைப்பாட்டு உணர்வை வளர்ப்பதற்குப் பாடுபட்டேன். காமராசர் தொடங்கிய இலவசக் கல்வித் திட்டத்தை நிறைவு செய்யும் பணிக்கு, முதல்வர்.பக்தவத்சலனார் என்னைப் பயன்படுத்தினார்.

எல்லோரும் எழுத்தறிவு பெறும் பெருந் திட்டத்திற்கு ஆய்வுப் பண்ணையை வெற்றிகரமாக நடத்தி விளக்குவதற்கு, முதலமைச்சர் அண்ணாவுக்குப் பயன்பட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/13&oldid=480531" இலிருந்து மீள்விக்கப்பட்டது