பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xii

கல்லூரிக் கல்வியை வளர்ப்பதற்கும், அந் நிலைக் கல்வியைச் செழுமைப் படுத்தவும் பல்கலைக் கழகத்தில் நூல்கள் வெளியீட்டைப் பெருக்கவும் முதல்வர் டாக்டர். கலைஞர் கருணாநிதி என்னைப் பயன்படுத்தினார்.

முதல்வர் டாக்டர். எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் பெரியார் வரலாற்றைச் சிறுவர்களுக்கு வண்ணப்படங்கள் வாயிலாகவும், பெரியவர்களுக்கு எழுத்தில் ஆயிரம் பக்கங்களிலும் உருவாக்கித் தருமாறு என்னைப் பணித்தார். அப் பெரும் பணிகளுக்குத் துணையாக, டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் தக்கார் குழு ஒன்றையும் நியமித்தார்.

'பெரியார் வரலாறு - வண்ணப்படங்கள்’ என்ற நூலை முடித்துக் கொடுத்து நான்காண்டுகள் ஓடிவிட்டன.

பெரியாரின் முழு வரலாற்றில் முதல் இரு பகுதிகளை நான் அறுநூறு பக்கங்களில் கொடுத்து, சில ஆண்டுகள் கழிந்துவிட்டன.

முதல் பாகத்தை எழுத்தெண்ணிப் படித்த நாவலர் ஈன்ற ஒப்புதலுக்குப் பின், அப் பகுதியை அச்சகம் ஒன்றிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகக் கேள்வி.

விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமராகிய பண்டித நேரு அவர்கள், தமிழ்நாட்டுக் கல்வி வளர்ச்சியையும் பகல் உணவுத் திட்டத்தையும் பொது மக்களைக் கொண்டே பள்ளிகளைச் சீரமைக்கும் இயக்கத்தையும் பெரிதும் பாராட்டி வளர்த்து வந்தார். அச் செயல்களை உரிய முறையில் விவரித்துள்ளேன். தொடக்கக் கல்வி பற்றிய யூனெஸ்கோ மாநாடுகள் இரண்டு இவற்றை வரவேற்றுப் பரித்துரைத்தன. வரலாற்றுச் சிறப்புமிக்க அம் மாநாடுகளைப் பற்றி இந்நூலில் படிக்கலாம்.

பிரதமர் இந்திராகாந்தியின் காலத்தில், இந்திய அரசின் கல்வி, அமைச்சகத்தில் கல்வி இணை ஆலோசகனாகப் பணி புரிந்தேன். உழவர் எழுத்தறிவு இயக்கத்தின் முன்னோடித் திட்டத்தையும் யூனிசெப் அறிவியல் திட்டத்தையும் இறுதி வடிவம் கொடுத்து நடத்த வாய்ப்புக் கிடைத்ததை என் வரலாறு சொல்ல வேண்டாமா?

நான் பங்கு கொண்ட உலகத் தமிழ் மாநாடுகள், பன்னாட்டுக் கல்வி மாநாடுகள் பற்றிய விவரங்கள் ஏராளம்.

'நினைவு அலைகள்’ என்னும் என் வரலாறு உண்மையில் தமிழக, இந்தியக் கல்வி வரலாற்றின் கூறுகள் ஆகும். எனக்கு ஒதுக்கியுள்ள இடத்தைப்போல், பன்மடங்கு இடத்தை, பல நிலை நிகழ்ச்சிகளுக்கும் நல்லவர்களுக்கும் கொடுத்துள்ளேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/14&oldid=480534" இலிருந்து மீள்விக்கப்பட்டது