பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

இயங்கிக் கொண்டிருக்கின்ற இளந்தலைமுறையைக் காப்பாற்றக் குரல் கொடுத்து நல்வழிக்கு அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொள்வது யார் எனத் தெரியவில்லை! எங்கெல்லாம் மனித உணர்வுகள் மழுங்கடிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் தயங்காமல் குரல் கொடுக்கிற மனிதத் தன்மையாளர்கள் அவதாரமெடுக்க வேண்டும். இல்லையேல், சில ஆண்டுகளில் மோசமான சிந்தனைகளால் இளைய சமுதாயம் தடுமாறிப் போய்விடும்! சமுதாய மாற்றத்திற்காக விதை போடுபவருக்காகக் காத்திராமல், எவரேனும் வருவர் என எதிர்பார்க்காமல் ஒரு சிலராவது செயல்பட வேண்டும். இவற்றில் எல்லாம் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும்! சமுதாய நலம் கருதிச் செயல்படும் தலைவர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் எதிர்வரும் சமுதாயத்தில் உருவாக வேண்டும்.

சமுதாய நலனுக்கு உழைப்பவர் விருதையும் பாராட்டையும் எதிர்பார்ப்பதில்லை! ஆயினும் தமது பணி சமுதாயத்திற்குப் பயன்பட்டதா, சமுதாயம் தம்மைப் புரிந்து கொண்டதா, தம் பணியின் பயனைச் சமுதாயச் சான்றோர் அறிந்தனரா என்பதன் விளைவுகளான நன்மொழிகளை எதிர்பார்ப்பர். இந்த எதிர்பார்ப்பு நிறைவு பெறும் வகையில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் சமூகப் பொறுப்பைப் பாதுகாப்பதாகக் கூறும் தலைவர்களும் நன்மொழிகளை வழங்க வேண்டும். இந் நன்மொழிகள், பயன் - கருதாப் பணியாளருக்கு ஊக்கமூட்டும்! உற்சாகமூட்டும்! தம் பணியைத் தொடரத் தெம்பூட்டும். ஆனால் நெ. து. சு. அவர்களின் பணிகளைப் பாராட்டி, ஊக்கமூட்டி விருதளிக்கக் காரணமாக இருந்த தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் மறைந்த பின்னர், நாடாண்ட தலைவர்களிடம் வாய் வார்த்தைக்குக்கூடப் பஞ்சம் வந்துவிட்டது. நெ. து. சு. அவர்களின் பண்பைக்கூடப் புகழ்வதுபோல் வஞ்சப் புகழ்ச்சியாகப் பழித்துப் பேசும் பெருமக்கள் தலைதூக்கினார்கள். சுயநல நோக்கத்துடன் செயல்பட்ட சிலர் தாங்கள் வளைத்த வளைப்புக்கு வளையாதவரை வாய் வார்த்தைகளால் ஊனப்படுத்தினர். அதனால் நெ. து. சு. அவர்கள் மனம் வெறுத்த நிலையில் இருந்தார். அந்த வேளையில் தான் ’சத்ய கங்கை’யில், அவர் பணியை மதித்த சான்றோர் சிலர் ‘சுயசரிதை எழுதுமாறு வேண்டுதல்விடுத்து வற்புறுத்தினர். நீண்ட சிந்தனைக்குப் பிறகு, தொடர்ந்த வற்புறுத்தலால் நெ.து.சு அவர்கள் உடன்பட்டு ’வேண்டப்படாதவன்' என்னும் தலைப்பில்தான் எழுதுவேன் என்று உறுதியுடன் தொடங்கினார். ஆனால், தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம், சத்ய கங்கை' ஆசிரியர் பகீரதன் முதலான நல்லோர் பலரின் வேண்டுதலால் தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/9&oldid=480524" இலிருந்து மீள்விக்கப்பட்டது