பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நினைவு அலைகள் "அவர் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாமென்று வேண்டிக் கொள்ளுவதாகச் சொல்லுங்கள். "நான் இயங்கும் கல்வித்துறைக்கு அவர் அமைச்சராக இருக்குமட்டும், கட்டுப்பாட்டோடுதான் நடந்து கொள்வேன். அகலாது அணுகாது செயல்பட்டு, அதேபோது சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லிவிடுவேன். “அடிப்படைக் கொள்கை பற்றியதானால், சற்று அழுத்தமாகவே சொல்லிவிட்டாலும் ஆணவமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் என் சார்பில் வேண்டிக் கொள்ளுங்கள். "வேறொருவர் முன் நியாயப்படுத்த முடியாத எந்தப் பரிந்துரையையும் அவரிடம் தனியாகச் சொல்லி, நினைத்ததைச் சாதித்துக் கொள்ள மாட்டேன். “பெரியவர்களுக்கு நண்பர்கள் இருப்பது, நற்பெயர் வாங்கித் தரவே. ஒருமுறை காதைக் கடிக்கவிட்டால், அது நாளடைவில் அமைச்சரின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்திவிடும். “எனவே, எட்டி நின்றே, சற்று அதிகப்படியான மதிப்புக் கொடுத்தே, அடக்கத்தோடுதான் தொடர்ந்து நடப்பேன். ஆனால், விழிப்போடு உறுதியாகவும் ஆலோசனை கூறத் தயங்கமாட்டேன்” என்று பதில் அளித்தேன். அதன்படியே நடந்தேன். துணிச்சலா? இல்லை! துடுக்கா? இல்லை! இந்த வெள்ளை உள்ளத்தை சி. சுப்பிரமணியத்தால் புரிந்துகொள்ள முடிந்தது. 7. காமராஜர் என் படத்தைத் திறந்தார் வம்பைத் தேடினேனாம் நான் பொதுக்கல்வி இயக்குநராகி, இரண்டு திங்கள் கழிந்திருக்கும். அப்போது ஒருநாள், கோட்டையில், கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்களோடு அலுவல் பற்றிச் சிலவற்றைப் பேசிவிட்டுப் புறப்பட்டேன். “சற்றுப் பொறுங்கள்” என்றார் அமைச்சர். கட்டளைக்குப் பணிந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/94&oldid=788704" இலிருந்து மீள்விக்கப்பட்டது