பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5B நினைவு அலைகள் அக் கல்லூரியை அவருடைய முன் முயற்சியால் நல்லவர்கள் சிலர் தொடங்கியபோது, நான் மாநகராட்சிக் கல்வி அலுவலர் திரு இராமசாமி செட்டியாரின் மதிப்பைப் பெற்ற நண்பன். நான் பொதுக்கல்வி இயக்குநராக உயர்ந்தபோது, அந்தக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர் திரு. எம். கே. சண்முகம் அவர்கள். எனக்கு இயக்குநர் பதவி கிடைத்தது பற்றி மகிழ்ச்சியில் திளைத்த எண்ணற்றோரில் அவரும் ஒருவர். - கல்லூரி நிர்வாகக் குழுவில் இருந்த சர்தார் ஆதிகேசவலு நாயக்கர், திரு. பார்த்தசாரதி நாயக்கர் ஆகியோருக்கும் மகிழ்ச்சி. அவர்கள் எனக்குத் தெரியாமலே, என்னைப் பெருமைப்படுத்த ஏற்பாடு செய்தார்கள். இச் செய்தி என் காதுக்கு எட்டவில்லை. ஒருநாள் காலை, முதல்வர் சண்முகம் என் இல்லத்திற்கு வந்தார்; ஒர் அழைப்பினைத் தந்தார். அதைப் படித்தேன்; அதிர்ச்சி கொண்டேன். ஏன்? குறிப்பிட்ட ஒரு நாள் மாலை, கல்லூரி மண்டபத்தில், முதலமைச்சர் மாண்புமிகு காமராசர், பொதுக்கல்வி இயக்குநர் நெ. து. சு. வின் திருவுருவப் படத்தைத் திறந்து வைப்பார் என்றும் அதற்கு வருகை புரிந்து சிறப்பிக்கும்படியும் அழைப்பு இருந்தது. வெகுளி கொப்பளித்தது. நானோ அவருக்குப் புதியவன். எனவே, கோபத்தை ஒளித்துக் கொண்டு, "நீங்கள், என்னைக் கேட்காமல் இப்படிச் செய்து இருக்கக் கூடாது. இது எனக்கு நல்லதல்ல. உரிமை கொண்டாடுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினேன். "ஒரு நூற்றாண்டு கழிந்தபிறகு, முதன் முதலாக ஒரு தமிழர் இயக்குநராகியுள்ளார் என்ற அடக்கமுடியாத மகிழ்ச்சியில் செய்த தவறை மன்னித்துவிடுங்கள்” என்று திரு. சண்முகம் வேண்டினார். நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று பளிச்சென்று புரியவில்லை. = கல்லூரி முதல்வருக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, அமைதியாகச் சிந்தித்தேன். ஒருவழி மின்னிற்று ஞானோதயம் பெற்றதுபோல் தோன்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/98&oldid=788708" இலிருந்து மீள்விக்கப்பட்டது