பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடியாரம் அனுப்பப்பட்டிருந்தது. வேணுப்பிள்ளை அதைப் பிரித்து வெளியே எடுப்பதைப் பார்ப்பதற்கு அந்த வளைவில் இருந்தவர்கள் பலரும் வந்து கூடிவிட்டார்கள். அவர் எச்சரிக்கை உணர்வோடு, பார்சலைப் பிரித்து, கடியாரத்தை வெளியே எடுத்து, மகிழ்ச்சியும் பெருமையும் பொங்க எல்லோருக்கும் காட்டினார். சுவரில் நல்ல இடம் பார்த்து ஆணி அடித்து அதை மாட்டினார். புதிய சுவர்க் கடியாரத்தினால் அந்த வீட்டுக்கு தனி மதிப்பு சேர்ந்தது. வேணுப்பிள்ளை வீட்டுக்கு வாரம் தோறும் லோகோபகாரி இதழ் வந்து கொண்டிருந்தது. பரலி சு. நெல்லையப்பர் அவருக்கு உறவினராக இருக்கலாம். வேணுப்பிள்ளை அதற்கு சந்தா கட்டியிருந்தார். பத்திரிகையை அவர் படித்து விட்டு, எங்களுக்கும் படிக்கத் தருவார். அதன் ஆசிரியர் பரலி நெல்லையப்பரைப் பற்றிப் பெருமையாகச் செல்லுவார். எதிர்வரிசையில் இருந்த ஒரு வீட்டில் வசித்த குடும்பத்தின் தலைவர் கார்காத்தார் சங்கத்துடன் தொடர்பு கொண்டவர். சென்னையில் இருந்து வீரபாகு பிள்ளை என்பவர் நடத்திய ஒற்றுமை என்ற இதழுக்கு சந்தா சேகரித்து அனுப்புவதிலும் அவர் ஈடுபட்டிருந்தார். அவர் அப்பாவிடமும் சந்தாப் பணம் வாங்கி, எங்கள் வீட்டுக்கு ஒற்றுமை' இதழ் வரும்படி செய்தார். இப்படியாக 1929லேயே எனக்கு சிறுபத்திரிகைகளின் அறிமுகம் ஏற்பட்டுவிட்டது. மந்திரமூர்த்தி உயர்நிலைப் பள்ளியில் வருடத் தேர்வுகள் முடிவுற்றதும் மேல் கொண்டு படிப்பை பாளையங்கோட்டையில் தொடரவேண்டும் என்று அப்பா தீர்மானித்தார். எனவே, அம்மா ஒருநாள் பாளையங்கோட்டை போய், அங்கு வாடகைக்கு வசதியான வீட்டைப் பார்த்து முடிவு செய்து வந்தாள். 1929 மே மாதம் குடும்பம் திருநெல்வேலியை விடுத்து பாளையங் கோட்டை சேர்ந்தது. 104 : வல்லிக்கண்ணன்