பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது.

ஆதியும் அந்தமும் வரையறுக்க முடியாத காலவெளியில் நான் எண்பத்தைந்து ஆண்டுகளாக பயணம் செய்துகொண்டிருக்கிறேன்.

ஓடும் காலம் ஒவ்வொருவரிடமும் விதம்விதமான அனுபவங்களை பதித்துச் செல்கிறது. அவை மனித உள்ளத்தில் நினைவுகளாக ஆழ்ந்துவிடுகின்றன.

மனிதக்குழந்தை பொதுவாக, தனது மூன்று முன்றரை வயதில் நிகழ்ந்த சம்பவங்களையும் எதிர்ப்பட்ட அல்லது சுற்றியிருந்த மனிதர்களையும் தன்னை பாதித்த மற்றும் தாக்கம் ஏற்படுத்தியவற்றில் பலவற்றையும் பிற்காலத்தில் நினைவுகூர இயலும் இது உளவியல் கூறும் உண்மையாகும்.

சில சந்தர்ப்பங்களில், அபூர்வமான நுண்ணுணர்வுபெற்ற மனிதர்கள் அவர்களது இரண்டு இரண்டரை வயது அனுபவங்களை, அப்போது ஏற்பட்ட மனப்பதிவுகளை, பின்னர் எண்ணிப் பார்க்கையில் நினைவுகூர இயலும் என்றும் சொல்லப்படுகிறது.

எனக்கு அத்தகைய நுண்ணுணர்வு ஆற்றல் இல்லை. எனது மூன்று - மூன்றரை வயதில் நிகழ்ந்தவைகள், வசித்த வீடு, பழகிய இடங்கள் நினைவில் நிற்கின்றன. நான்கு ஐந்து வயது அனுபவங்கள் மிகத் தெளிவாக மனசில் நிழலிடுகின்றன.

நான் பிறந்தது 1920 நவம்பர் மாதம் 12ஆம் நாள் - தமிழ் வருடம் ஒன்றின் ஐப்பசி மாதம் ஒரு வெள்ளிக்கிழமை அன்று - அனுஷம் நட்சத்திரத்தில் - என்று என் பெற்றோர் எனக்கு அறிவித்திருக்கிறார்கள்.

என் அப்பா சுப்பிரமணியப் பிள்ளை பல்வேறு ஆற்றல்கள் பெற்றிருந்த உற்சாகமான மனிதர். அவர் சந்தோஷ மனநிலையில் இருந்தபோது சுவாரசியமான கதைகள், விடுகதைகள் சொல்வது வழக்கம். அப்படிப்பட்ட சமயங்கள் சிலவற்றில்,

11