பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதற்கு அதிகப்படியான மண்ணெண்ணெய் தேவைப்படுமே. அதை சமாளிப்பதற்கு குற்றாலம் பிள்ளை ஒரு வழி கண்டு பிடித்தார். அக்காலத்தில் நகரங்களில் கூட மின்சார விளக்குகள் பரவியிருக்க வில்லை. தெருக்களில் முனிசிபல் லாந்தர்கள் விடியவிடிய எரியும். தெருவில் சற்று தூரத்துக்கு ஒன்றாகக் கல் தூண்கள் நிறுத்தப் பட்டிருந்தன. அவற்றின் மீது, சதுர வடிவத்தில், கண்ணாடிச் சுவர்கள் கொண்ட விசேஷ அமைப்பு உடைய கூண்டினுள் மண்ணெண்ணெய் விளக்குகள் வைக்கப் பட்டிருக்கும். காலையில் முனிசிபாலிட்டி ஆள் ஒருவன் வந்து விளக்குகளை எடுத்துப் போவான். ஆபீசில் அவை துடைத்து சுத்தம் செய்யப்பெற்று, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நிரப்பப்படும். மாலையில் ஒரு ஆள் விளக்குகளை எடுத்துக் கொண்டு ஏணியோடு வருவான். ஒவ்வொரு கம்பத்திலும் ஏணியைச் சாற்றி ஏறி, கூண்டுக்குள் விளக்கை வைத்து நெருப்பு கொளுத்திவிட்டுப் போவான். முக்கியமான இடங்களில், இரண்டு மூன்று வீதிகள் சந்திக்கும் இடங்களில், உயரமான கம்பங்கள் அமைத்து, கியாஸ் லைட்டுகள் தொங்கவிடப்பட்டிருக்கும். அதில் காற்றடைத்து விளக்கேற்றிச் செல்வதற்கு தனியாக ஒரு ஆள் இருந்தான். பாளையங்கோட்டை நகரமாயினும் பரபரப்பு இல்லாத ஊர்தான். பகலிலேயே தெருக்களில் ஆள்நடமாட்டம் அதிகம் இராது. இரவு நேரத்தில் ஒன்பது மணிக்குள் ஊர் அடங்கிவிடும் கோபாலசாமி கோயில் வீதிகள் வெறிச்சிட்டுக் கிடக்கும் ஆள் நடமாடாத தெருவிலே விளக்கு ஏன் வீணாக எரியுது? அது நமக்கு நாவல் படிக்க உபயோகப் படட்டுமே என்று சொல்லி, குற்றாலம் பிள்ளை தெரு விளக்கு ஒன்றை வீட்டுக்குக் கொண்டு வந்து விடுவார். அதன் வெளிச்சத்தில் நண்பர்கள் நாவல் படிப்பார்கள். படித்தது போதும் என்று தோன்றியதும், குற்றாலம் அந்த விளக்கை எடுத்த இடத்தில் கொண்டுபோய் வைத்து விடுவார். நீதிபதியாகப் பதவி வகித்த முத்துசாமி அய்யர், மாணவப் பருவத்தில் வறுமை காரணமாக தெருவிளக்கின் கீழ் அமர்ந்து பாடங்களைப் படித்தார். பிற்காலத்தில் அவர் மிக உயர்ந்த நிலையை அடைந்தார் என்று படித்திருக்கிறோம் அல்லவா? நாமும் அவரைப் போலவே தெருவிளக்கில் படிக்கிறோம். ஆனால் ஒரு வித்தியாசம் அய்யர் 118 : வல்லிக்கண்ணன்