பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறித்தார்கள். தொண்டருக்குக் கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிரித்தவாறே கதர் கப்பல் கொடி தொணுதே' என்று பாடியபடி போலீசாருடன் தலை நிமிர்ந்து நடந்தார். இவ்விதம் தேசபக்த உணர்வு சாதாரணர்களை வீர சாகசம் புரியக்கூடிய ஹீரோக்களாக மாற்றிக் கொண்டிருந்த காலம் அது சிறிய பெட்டிக்கடை வைத்துப் பிழைப்பு நடத்தியவர்களும், சாதாரணக் கொத்து வேலை கூலி வேலை செய்து வாழ்க்கை ஒட்டியவர்களும் தேசபக்தி மீதுறப் பெற்று, துணிந்து செயலில் இறங்கி நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். தங்கள் குடும்பத்தின் நிலை பற்றியோ, தங்களது எதிர்காலம் குறித்தோ அவர்கள் எண்ணியதில்லை. நாடு விடுதலை பெற வேண்டும் அதற்காக நாமும் நம்மாலானதைச் செய்ய வேண்டும் என்ற உந்துதலே நாட்டுமக்களின் உள்ளத்தில் கிளர்ச்சியூட்டியது. சிறுசிறு செயல்கள் மூலமும் அவர்கள் அந்நியர் ஆட்சியின் மீதான தங்கள் எதிர்ப்பைக் காட்டத் துடித்தார்கள். ராஜா தலை பொறிக்கப் பட்ட ரூபாய் நாணயத்தில், தலை மீது ஒட்டை போட்டு சாவிக் கொத்தில் தொங்கவிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய தொண்டர்கள் இருந்தார்கள். ராஜா தலை அச்சிடப்பட்டிருந்த அகலமான காலணா, அதனினும் பெரிய அரையனா செப்புக் காசுகளில் துளையிட்டு தக்ளி செய்து, அதில் நூல் நூற்று பெருமைப் பட்டவர்களும் உண்டு. அரசாங்கத்துக்கு எந்த விதத்தாலும் நஷ்டம் ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டே ஒரு தொண்டர், அநாவசியமாக, தபாலாபீசில் அடிக்கடி மணியார்டர் பாரம் பெற்று அதை கிழித்தெறிந்து காற்றில் பறக்கவிட்டு மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் மணியார்டர் பாரத்துக்கு விலை கிடையாது. இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தது. பக்கிள் ஆயான் என்றொரு தொண்டர் இருந்தார். திருநெல்வேலி யில் சிறு பெட்டிக்கடை நடத்தி வாழ்ந்தார். கடையை கவனிப்பதை விட பொது நிகழ்ச்சிகள், கூட்டங்களிலேயே அதிக அக்கறை காட்டிக் கொண்டிருந்தார். விசேஷக் கூட்டம் நடக்கிற நாளில், பகலில் முன்னதாகவே தண்டோரா அடித்தபடி தெருத் தெருவாகத் திரிந்து, அன்றையக் கூட்டத்துக்கு அவர் தான் விளம்பரம் செய்வார். 125 : வல்லிக்கண்ணன்