பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பையன்கள், சிறுமியர், சில பெரிய ஆள்கள் கூடிய கும்பல் ஒன்று அங்குமிங்கும் ஓடியது. அங்கே ஒரு பெண் குதித்துக் குதித்து தாவிச் சென்றாள். அடிக்கடி நின்றாள். பன்னிரண்டு பதின்மூன்று வயதிருக்கும் கட்டுகுட்டென்று - கழுக்கு மொழுக்கென செக்குலக்கை மாதிரி உருண்டு திரண்ட உருவம் சாதாரணச் சீட்டித் துணியாலான கவுன் அணிந்திருந்தாள். அது முழங்காலுக்குக் கீழே சிறிதளவுதான் நீண்டிருந்தது. மொட்டைச்சி என்று சொல்லப்படவேண்டிய அளவுக்கு தலைமுடி ஒட்டவெட்டப்பட்டிருந்தது. அந்தப் பெண் சட்டென நின்று கவுனின் பைக்குள் கைவிட்டு, காசுகளை அள்ளி எடுத்து, கும்பல் மீது விட்டெறிந்தாள். சிதறி விழுந்த காசுகளைப் பொறுக்குவதற்காகக் கும்பல் ஜனங்கள் முட்டிமோதினர். அவள் வேடிக்கை பார்த்துக் கை கொட்டிச் சிரித்தாள். 'லட்சுமி லட்சுமி காசு போடு என்று பலரும் கத்தினார்கள். அவள் குதித்துக் குதித்து ஓடினாள். கடைத்தெருவிலிருந்த ஒரு ஒட்டலுக்குள் புகுந்தாள். அங்கு முன்னடியில் மேஜை போட்டு உட்கார்ந்து, வாடிக்கையாளர்களிடம் பில்படி காசு வசூலித்துக் கொண்டிருப்பவர் அருகே சென்றாள். மேஜையில் பல கிண்ணங்களில் ஒரு ரூபாய், எட்டனா, நாலணா, இரண்டனா, ஓரணா என்ற ரீதியில் காசுகள் நிறைந்திருந்தன. அந்தப் பெண் சுதந்திரமாகக் கைநீட்டி காசுகளை அள்ளிக் கொண்டு தெருவுக்கு வந்தாள். ஹோட்டல்காரர் அதட்டாமல், கண்டிக்காமல், கோபித்துக் கூச்சலிடாமல் சிரித்த முகத்தோடு பார்த்தவாறு இருந்தார். அவள் வெளியே வந்து, ஒட்டலின் வாசலில் மேல்படியில் நின்றபடி கும்பலை நோக்கிக் காசுகளை விட்டெறிந்தாள். அவற்றைப் பிடிக்கவும் சிதறி விழுந்தவற்றைப் பொறுக்கவும் கும்பல் மோதிச் சாடுவதைக் கண்ட அந்தப் பெண் கைகொட்டிக் களித்தாள். உடனே பக்கத் திலிருந்த ஒரு பெரிய கடைக்குள் புகுந்தாள், மிடுக்காக வீற்றிருந்த முதலாளிக்கு முன்னிருந்த கல்லாவிலிருந்த காசுகளை அள்ளினாள். வெளியேறினாள் ஜனங்கள் மத்தியில் வீசி எறிந்தாள். இப்படி ஒட்டல்கள், கடைகள் பலவற்றினுள்ளும் சென்று அவள் தாராளமாகக் காசுகளை அள்ளி வந்து கும்பலை நோக்கி வீசி மகிழ்ந்தாள். கும்பல் அதிகரித்தவாறே இருந்தது. அங்கே வந்த போலீஸ்காரர்களும் சிரித்தபடி வேடிக்கை பார்த்து நின்றார்களே தவிர, ஆக்கினை எதுவும் செய்யவில்லை. நிலைபெற்ற நினைவுகள் $ 143