பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்த்திருந்தார்கள். முடியைச் சீவிப்பதப்படுத்தி கொண்டை போட்ட வாறு தான் பள்ளிக்கு வருவர். 1932க்கு அப்புறம் பிராமண ஆசிரியர்களிடம் மெது மெதுவாக கிராப் நாகரிகம் புகுந்தது. இரண்டு, மூன்றாவது பாரங்களுக்கு சயன்ஸ் டீச்சர் ஆக இருந்த சீதாராம ராவ்தான் முதன்முதலாகத் துணிந்து முடியை வெட்டிவிட்டு, கிராப் தலையராக மாறி வழிகாட்டினார். 1932 கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறந்ததும் புதிய தோற்றத்துடன் வந்த அவரைப் பார்த்து இதர ஆசிரியர்களே வியந்தார்கள். மாணவர்கள் பேராச்சரியம் கொண்டார்கள். பிறகு ஒவ்வொரு வருடமும் பெரிய லீவு முடிந்து, பள்ளி திறந்த போது ஒன்றிருவராய் ஆசிரியன்மார்கள் தலைமுடியைத் துறந்து, கிராப் வைத்தவர்களாய் வருவது வழக்கமாயிற்று ஒரு சில வருடங்களில் நீண்ட தலைமுடி அழகர் ஆசிரியர்களில் எவரும் இலர் என்ற நிலை ஏற்பட்டது. நான் கூட தேர்டு பார்ம் (எட்டாம் வகுப்பு) படித்துக் கொண் டிருந்த போது தான், நீண்டு வளர்ந்த கூந்தலைத் துறந்து, கிராப் தலையன் ஆனேன். வாத்தியார்கள் பலரகம் கண்டிப்பும் கறாருமாக நடந்து கொள்ளக் கூடியவர்களும் இருந்தார்கள். அன்பாகப் பேசிப்பழகி, பாடங்களோடு கதைகள் சொல்லி மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களும் இருந்தார்கள். ஒரு உபாத்தியாயர் தேசபக்தி அதிகம் கொண்டிருந்தார். வெள்ளையர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று ஆர்வ மாகப் பேசுவார். பிரிட்டிஷாருக்குப் புத்தி புகட்ட நெப்போலியன் மாதிரி ஒருவன் தேவை என்பார். அவர் சதா நெப்போலியன் - நெப்போலியன் என்று உற்சாகமாகப் பேசுவது வழக்கம் அவர் நெப்போலியன் என்று கூறுவது நெய்ப்போளி என்று சொல்வது போல் தொனிக்கிறது என்று ஒரு பையன் சொன்னான். அது முதல் அந்த வாத்தியாரை நெய்ப்போளி என்று பையன்கள் குறிப்பிடலாயினர். வைத்திலிங்கய்யர் என்றொரு கணக்கு வாத்தியார் இருந்தார். அவர் பையன்களுக்கு நிமிட்டாம்பழம் (சதையைவிரல்களால் இறுகப் பற்றிக் கிள்ளுதல்) கொடுப்பதில் பெயர்பெற்றவர். பிரம்பினால் அடிக்கவும் செய்வார். அதனால் பையன்களுக்கு அந்த வாத்தியாரைப் பிடிக்காது. 145 : வல்லிக்கண்ணன்