பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளையரை எதிர்த்து வீரமுழக்கம் செய்து, வெள்ளைக்கார ஆட்சியரை திணறவைத்து, முடிவில் கயத்தாறு என்ற இடத்தில் புளியமரத்தில் தூக்கிடப்பட்டு இறந்தான் கட்டபொம்மன். அவனிடம் தானாதிபதியாகப் பணியாற்றியவர் ஒட்டப்பிடாரத்துக்காரர் தான். 'ஒட்டப் பிடாரமாம் தானாதியாம் - அவர் ஒம்பது கம்பளம் ஆண்டவராம்' என்று கட்டபொம்மன் வரலாற்றுப் பாடலில் வருகிற அடிகளைப் பாடிக்கொண்டு திரிந்தார்கள் ஒட்டப்பிடாரம் சிறுவர்கள். ஒட்டப் பிடாரத்தில் வக்கீல் பிள்ளை வீட்டில் தான் நாங்கள் குடியிருந்தோம். வக்கீல் பிள்ளை என்பவர் வ.உ.சி. தான்; அவர் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பிறகு வாழ்க்கையில் கஷ்டப் பட்டு, மீண்டும் வக்கீலாகி, கோவில்பட்டியில் தங்கி தொழில் நடத்திக் கொண்டிருந்த காலம் அது. அவரது ஒட்டப்பிடாரம் வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அதில் தான் நாங்கள் வசித்தோம் வக்கீல் பிள்ளையை ஒன்றிரு தடவைகள் பார்த்த நினைவு எனக்கு இருக்கிறது. ஆனால் அவரது பெருமைகளை எல்லாம், வரலாற்றுச் சிறப்புகளை, வெகுகாலத்துக்குப் பிறகே நான் அறிந்து கொள்ள முடிந்தது. ஒட்டப்பிடாரத்தில் இருந்த போது, எனக்கு தம்பி பிறந்தான். அவனுக்கு முருகேசன் என்று பெயரிடப்பட்டது. அப்போது எனக்கு மூன்றரை வயது. அந்த ஊரில் உலகம்மன் கோயில் மிகப் பிரபலம். ஒரு சமயம் அண்ணன் கோமதிநாயகம் அந்த அம்மனுக்கு பால்குடம் எடுத்தது, அப்போது ஊரைச் சுற்றி வந்து கோயிலுக்குப் போனது, என் நினைவில் நன்கு பதிந்திருக்கிறது. அப்பாவின் சேவகர் ஒருவர் என்னை தூக்கிக் கொண்டு கூட்டத்தோடு நடந்தார். என் அம்மாவுக்கு பக்தி உணர்வு அதிகம் அம்மன்கள், சாமிகளுக்கு வேண்டிக்கொள்வதும், பிறகு நேர்த்திக்கடன்களை தீர்ப்பதற்காக செலவுகள் செய்வதும் கடைசி வரை அம்மாவுக்குப் பிடித்தமான காரியங்களாகவே இருந்தன. அப்பா மறுப்பு கூறியதில்லை. - ஒட்டப்பிடாரம் உலகம்மனுக்கும் நிறையவே செய்தார்கள். பெரிய கொப்பரை, சருவச்சட்டி, அகப்பை என்று பாத்திரங்கள் பல வாங்கி அளித்தார்கள். நிலைபெற்ற நினைவுகள் 3 15