பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1936 மே மாதம் எஸ். எஸ். எல். சி. பரீட்சையின் முடிவு தினப் பத்திரிகைகளில் வெளிவந்தது. அப்படி பள்ளி இறுதித் தேர்வின் முடிவு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. அதுவே முதல் முறையாகும். அதற்கு முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் பள்ளிக் கூடங்களுக்கே அனுப்பிவைக்கப்பட்டன. மாணவர்கள், அவரவர் படித்த பள்ளி களுக்குப் போய்த்தான் முடிவைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. இப்போது ராஜவல்லிபுரத்தில் இருந்தபடியே நான் எனது தேர்வின் முடிவைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. தேர்வில் நான் தேறியிருந்தேன். மேற்கொண்டு காலேஜில் சேர்ந்து படிக்க வசதியில்லை. சர்டிபிகேட் புத்தகத்தை உடனடியாகப் போய் பள்ளியிலிருந்து நான் பெற்றுக்கொள்ளவில்லை. காலம் தாழ்த்தி, இரண்டு மாதங்கள் கழிந்த பிறகே பாளையங்கோட்டை சென்று எனது சர்டிபிகேட்டைப் பெற்று வந்தேன். அந்த வருடத்துக்கு முந்திய ஆண்டுமுதல், சர்வீஸ் கமிஷன் பரீட்சை நடைபெறலாயிற்று. குமாஸ்தா வேலை தேடுகிறவர்கள் எழுத வேண்டிய தேர்வு அது அரசாங்கமே நடத்தியது. நானும் சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுத வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னார்கள். அதற்கான முன்னேற்பாடுகள் பலவும் செய்யப்பட்டன. உரிய முறையில் மனுவும் அனுப்பி வைக்கப்பட்டது. உரிய நாளில் பரீட்சையும் எழுதினேன். ஆனால் வேலைக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை. ஏதாவது வேலை பார்த்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. உறவினர் ஒருவரின் துணையோடு அண்ணனும் நானும் சிற்சில கம்பெனிகளுக்கு கிளார்க் வேலைக்கு மனுச்செய்தோம் எந்த இடத்திலி ருந்தும் வேலைக்காக நாங்கள் அழைக்கப்படவில்லை. காலம் ஒடிக்கொண்டிருந்தது. கல்யாணசுந்தரம் அண்ணாச்சிக்கு திருமணம் நடந்தேறியது. பெண் வீடு திருநெல்வேலியில் அங்கு தான் கல்யாணம் நடந்தது. ராஜவல்லிபுரத்தில் மறுவீடு விசேஷம் சிறப்பாக நடைபெற்றது. ஆனந்த விகடன் பத்திரிகையை தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்த நாங்கள், 1936இல் விகடன் தீபாவளி மலரையும் விலைக்கு வாங்கினோம் சிறந்த கதைகளுடன் இனிய விருந்தாக அம் மலர் அமைந்திருந்தது. 18ரு 38 வல்லிக்கண்ணன்