பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கோட்டைக்கு நான் போயிருந்தால் அல்லவா அவை பற்றி எல்லாம் எனக்குத் தெரியும் எப்பவோ அடுத்த வீட்டு அம்மாள் செங்கோட்டை போய் வந்த பெருமையை அக்கம்பக்கத்தாருக் சுவையாகச் சொன்னதை நான் கேட்டதுண்டு. அந்த நினைவை அடிப்படையாக்கி வியாசம் எழுத முடிந்தது என்னால் அவ்வளவு தான். இப்போது மதுரை போய், அங்கிருந்து ரயில் மாறி பரமக்குடி போவது என்பது உளக்கிளர்ச்சி ஏற்படுத்தும் மாபெரும் புதிய அனுபவமாகவே தோன்றியது. என்னை தனியாக அனுப்ப விரும்பாத அம்மாவும் அண்ணன்மார்களும் ஒரு திட்டம் தீட்டினார்கள். அண்ணன் கோமதிநாயகம் எனக்குத் துணையாக வருவது; பரமக்குடியில் என்னோடு ஒரு வாரம் தங்கியிருந்து விட்டு அவர் ஊர் திரும்புவது என்பதுதான் அந்தத் திட்டம். அதன்படியே செயல்புரிந்தோம். முதல் நாள் மதுரையில் இறங்கி, எனக்கு வேலை வாங்கித் தந்த உறவினர் வீட்டில் தங்கினோம். மதுரைக் கோயில், மற்றும் சில தெருக்களை சுற்றிப் பார்த்தோம். மறுநாள் பரமக்குடிக்குப் பயணமானோம். ஊர் புதிது. அலுவலகம் புதிது, வேலையும் புதிது. புதிய அனுபவங் களை எதிர்கொள்வதற்காகக் காலம் என்னை அங்கே கொண்டு சேர்த்திருந்தது. 船1售路一 பரமக்குடி பரபரப்பு இல்லாத சாதாரண ஊராக இருந்தது. கடைத் தெருவும், அதற்குக் கீழ்பக்கமுள்ள பகுதிகளும் நெருக்கடியும் ஜனசஞ்சார மிகுதியும் கொண்டிருந்தது. மேற்குப்பக்கம் முனிசிப் கோர்ட் தாலுகா ஆபீஸ், தபாலாபீஸ் முதலிய அலுவலகங்கள் இருந்த பகுதி நெருக்கடியும் பரபரப்புமின்றி அமைதியாகவே தென்பட்டது. அதற்கும் மேற்குப்பக்கம் இருந்த மேலச்சத்திரம் பகுதி ஒருசில வீடுகளை மட்டுமே கொண்ட மிக அமைதியான பிரதேசமாக அமைந்திருந்தது. நிலைபெற்ற நினைவுகள் 28 185