பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியகுளம் போய் குடும்பத்தைக் கூட்டி வந்தார். அநேக மாதங்களுக்குப் பிறகு அவர் வேறு இடத்துக்கு மாறுதலாகிப் போய் விட்டார். டிமான்ஸ்ட்ரேட்டர் கணேசய்யரும் இடமாறுதல் பெற்று பரமக்குடியை விட்டுப் போனார். பிறகு கந்தசுவாமி என்ற துடிப்பான இளைஞர் அதிகாரியாக வந்தார். ஆறேழு மாதங்களில் அவரும் கோவில்பட்டிக்கு மாற்றப்பட்டார். ஆபீசர் இல்லாத காலங்களே அதிகம் இருந்தன. எனக்கு நிறையவே நேரம் கிடைத்தது. கதைகள் கட்டுரைகள் கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். சக்தி என்ற பெயர் முடிவைக் கொண்ட இதழ்கள் பல இருந்தன. அந்நாள்களில், நவசக்தி, லோகசக்தி, பாரத சக்தி என்றெல்லாம் பெயர்வைப்பதில் இளைஞர்கள் உற்சாகம் கொண்டிருந்தார்கள். நவசக்தி திருவி. கலியாண சுந்தர முதலியார் நடத்திய பத்திரிகை அதில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த சக்திதாசன் சுப்பிரமணியன் என்பவர் லோக சக்தியையும் கவனித்துக் கொண்டார். அதை எம்.கே. திருவேங்கடம் என்கிறவர் நடத்தினார். அவரே பாரதசக்தி என்ற பத்திரிகையையும் நடத்தினார். இவை தேசபக்தியை வளர்க்கும் கட்டுரைகள், கவிதைகள் கதைகளை வெளியிட்டன. விழி, எழு, போராடு என்ற தன்மையில் உணர்ச்சியைத் துண்டும் நடையில் எழுதப்பட்ட விஷயங்கள். நானும் அதே விதமான கட்டுரைகள் கவிதைகள் எழுதினேன். ஒவ்வொரு இதழிலும் அவை தவறாது இடம்பெற்றன. லோகசக்தி, பாரத சக்தி இதழ்களில் மதுரை ஐ, மாயாண்டி பாரதி விறுவிறுப்பான கட்டுரைகள் எழுதினார். படுகளத்தில் பாரததேவி என்ற தொடர் உணர்ச்சி வேகம் கொண்டதாக அமைந்திருந்தது. இக் காலகட்டத்தில் தான் எனக்கு ஒரு புனைபெயர் தேவை என்ற எண்ணம் எழுந்தது. இதுவரை ரா. சு. கிருஷ்ண சுவாமி என்ற பெயரிலேயே எழுதிக் கொண்டிருந்தேன். நல்லதாக ஒரு பெயர் வேண்டும் என்ன பெயர் வைக்கலாம் என்று எண்ணி வந்தேன். கவி சுப்பிரமணிய பாரதியார் வரலாற்றில், அவர் நண்பரான குவளைக் கண்ணன் பற்றிய குறிப்புகள் உண்டு குவளையூர் கிருஷ்ணமாச் சாரி என்ற பெயரை பாரதி குவளைக்கண்ணன் என்று ஆக்கி அவரை அவ்விதமே அழைத்தார் என்று ஒரு குறிப்பு இருந்தது. 196 3 வல்லிக்கண்ணன்