பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக்திதாசன் சுப்பிரமணியன் தான் நான் சந்தித்த முதலாவது சென்னை எழுத்தாளர் பத்திரிகை ஆசிரியர். அவர் துடிப்பான இளைஞராக இருந்தார். தஞ்சாவூர் ஜில்லா சீர்காழியை சேர்ந்தவர் என்று சொன்னார். சென்னை மாநகர் பற்றியும், பத்திரிகை உலகம் பற்றியும் நாகரிகப் பெருநகரின் விநோதங்கள் பற்றியும் சுவாரசியமாகப் பேசினார். சுவையான அனுபவங்களை விவரித்தார். நீங்கள் வளர்ச்சி பெற வேண்டுமானால், சென்னைக்கு வந்து தங்குவது தான் சரியாக - & இருக்கும் என்றார். அரசாங்க அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டு, தேசபக்தி ஊட்டுகிற, வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த உணர்ச்சிமயமான கட்டுரைகள் கவிதைகள் எழுதிக் கொண்டிருப்பது துணிச்சலான செயல் என்றார். இது பற்றி அவரும் திருவேங்கடமும் மற்றவர்களும் அடிக்கடி வியந்து பேசுவது உண்டு என்றும் சொன்னார். பரமக்குடி பத்திரிகை ஏஜன்ட் பாக்கிப் பணம் முழுவதையும் சக்திதாசனிடம் கொடுத்துவிடவில்லை. ஏதோ கொஞ்சம் கொடுத்தார். லோகசக்தி வெளியீடுகள் விற்பனையாக வில்லை புத்தகங்கள் அப்படியே கிடக்கின்றன என்றார். கணக்குப் பார்த்து, புத்தகங்களை என்னிடம் தந்துவிடும்படி சக்திதாசன் ஏஜன்டிடம் தெரிவித்தார். சக்திதாசன் இரண்டு நாள்கள் எங்களுடன் தங்கியிருந்தார். பிறகு விடைபெற்றுச் சென்றார். போகிற போதும், நீங்கள் இருக்க வேண்டிய இடம் அரசாங்க ஆபீஸ் அல்ல, சென்னையில் ஒரு பத்திரிகை ஆபீஸ் தான் உங்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும். காலம் வரும். நானே உங்களை சென்னைக்கு அழைத்துக் கொள்வேன் என்று உறுதியாகச் சொன்னார். நான் சென்னை சேரவேண்டும் என்ற எண்ணத்தை என் உள்ளத்தில் முதல்முதலாக ஊன்றி வளரவைத்தவர் சக்திதாசன் சுப்பிரமணியன் தான். காலம் நகர்ந்து கொண்டிருந்தது. இந்திய தேசிய விடுதலைப் போராட்டமும் மெதுமெதுவாக இயங்கிக்கொண்டிருந்தது. காங்கிரஸ் சமூக சீர்திருத்த விஷயங்களில் கவனம் செலுத்தியது. தீண்டாமை ஒழிப்பில் அது மும்முரமாக முனைந்து நின்றது. கோயில் நுழைவை (தீண்டாதவர்களின் ஆலயப்பிரவேசம்) சிற்சில ஊர்களில் நிகழ்த்தியது. 200 38 வல்லிக்கண்ணன்