பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மத்தியானமும் இரவும் சாப்பாடு மாதம் முடிந்ததும் மொத்தமாகப் பணம் கொடுத்து விடவேண்டும். பிள்ளையிடம் விடைபெற்றுக்கொண்டு, அண்ணாச்சி வீடுபோய் சேர்ந்தோம் அதுவும் அருகில் தான், அடுத்த தெருவின் முனையில், இருந்தது. அவர் மனைவி தான் நெருங்கிய சொந்தம் என் அப்பா கூடப் பிறந்த சகோதரி (எனக்கு அத்தையின் மகள். மச்சி என்ற உறவு வயது முதிர்ந்தவள். ஆண்களும் பெண்களுமாக ஆறுகுழந்தைகள், ராஜவல்லி புரத்தில் எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறத்தில் இருந்தது அவர்கள் வீடு. முத்தம்மா மச்சி அன்புடன் வரவேற்றாள். பிரியமாக நலம் விசாரித்தாள். மதிய உணவு படைத்தாள். நேரமானதும் அண்ணாச்சி ஆபீசுக்குக் கிளம்பினார். நானும் விடைபெற்று ஆபீஸ் சென்றேன். இந்த விதமாக இனிது ஆரம்பித்தது பூரீவைகுண்டம் வாழ்க்கை அந்த ஊர் ஒரு பெரிய கிராமம் என்று சொல்லக்கூடிய தன்மையில் தான் இருந்தது. பரபரப்போ ஜனநெருக்கடியோ இல்லாத சாதாரண ஊர். உயர்நிலைப் பள்ளி, தாலுகாபீஸ், கோர்ட்டு, சப்ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ் என்று பலவும் இருந்தன. கோர்ட்டு இருந்ததால் வக்கீல்கள் அதிகம் இருந்தார்கள். கோர்ட்டு இருந்த தெருவில் வரிசையாக வக்கீல் வீடுகள் காணப்பட்டன. அவற்றுடன், ஒவ்வொரு தெருவிலும் இரண்டு மூன்று வக்கீல் வீடுகள் இருந்தன. அவர்களுக்கு வருமானம் போதிய அளவு கிடைக்கக்கூடிய விதத்தில் தொழில் நடந்ததோ இல்லையோ, அவர்கள் தினந்தோறும் மணிக்கணக்குப்படி கோர்ட்டுக்குப் போய் வந்தார்கள். பஸ் நிலையமும் அருகிலேயே இருந்தது. ஆழ்வார் திருநகரி திருச்செந்தூர் போகிற பஸ்கள், தூத்துக்குடி, திருநெல்வேலி, ஏரல் போகிற பஸ்கள் என்று பல்வேறு பஸ்களும் வந்து போகிற இடமாக இருந்தது அந்த நிலையம் ஆயினும் பெரும் கும்பலோ நெருக்கடியோ கூச்சல் குழப்பமோ அங்குதலை காட்டியதில்லை. பெரிய கடைத்தெரு, சின்னக்கடைத் தெரு என்று இரண்டு கடைவீதிகள் இருந்தன. வியாபாரம் சுமாராக நடக்கும் பல விதக் கடைகளும் அங்கு இடம் பெற்றிருந்தன. ஐயர் ஒட்டல்களும், சைவப்பிள்ளைமார் கிளப்புகளும் போதுமான எண்ணிக்கையில் நிலைபெற்ற நினைவுகள் : 209