பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராண்டா, பின்பக்கம் சமையலறை, அதற்கப்பால் சிறு தோட்டம் என்று இடவசதி பெற்றிருந்தது. மாத வாடகை ஏழு ரூபாய். அவசர சமயத்துக்கு வீடு கிடைத்ததே என்ற மகிழ்ச்சி எனக்கு அம்மாவுக்கும் சந்தோஷம் தான். அவள் பிறந்த ஊரான கார்சேரியிலிருந்தும், பக்கத்து ஊரான சேரகுளத்திலிருந்தும் அம்மாவின் உறவின்முறையினர் - பெரும்பாலும் பெண்கள் - அவ்வப் போது வந்து போனார்கள். அம்மாவும் சேரகுளம், கார்சேரி என்று போய் வந்து கொண்டிருந்தாள். அம்மா அப்படி வெளியூர் போய்விடுகிற நாள்களில் தம்பி முருகேசன் தான் சமையல் வேலைகளை கவனித்துக் கொண்டான். அவன் சமையலில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தான். இரண்டு மூன்று நாள்கள், ஒரு வாரம் என்றால், அடுப்படி வேலைகளை கவனித்து சமையல் செய்து, சுசிருசியாக ஆக்கி வைப்பது அவனுக்கு ஒரு பொழுது போக்கு மாதிரி இருந்தது. சந்தோஷமாக அதை செய்தான். ஒருமுறை ஊர்வழி போன அம்மா ஒரு மாதத்துக்கு மேலாகியும் திரும்பவில்லை. பிறந்த ஊர், பிறந்த இடத்து உறவுக்காரர்கள் என்று சொந்தம் கொண்டாடி அங்கேயே தங்கிவிட்டாள். அந்த நீண்ட காலத்தில் சமையல் வேலை செய்வது தம்பிக்கு சங்கடமாக இருந்தது. அத்துடன் அவனுக்குக் காய்ச்சலும் (சுரம்) வந்து சேர்ந்தது. மூன்று நான்கு நாள்களாக சுரம் தணிய வில்லை. சிரமமாகிவிட்டது. ஒரு ஆள்மூலம் அம்மாவை உடனே வரும்படி சொல்லி அனுப்ப வேண்டியதாயிற்று அம்மா வந்து சேர்ந்தாள். வருத்தப்பட்டாள். அப்பா காலத்திலேயும் எனக்கு நிம்மதி கிடையாது பிள்ளைகள் காலத்திலும் எனக்கு நிம்மதியில்லை என்று அலுத்துக் கொண்டாள். மனிதமன இயல்புகள் என்னுள் உறுத்தல் ஏற்படுத்தின. ஆபீசர் அந்தோணிப் பிள்ளையும் அவரது இயல்புகளை மறை முகமாகவும் வெளிப்படையாகவும் புலப்படுத்திக் கொண்டிருந்தார். மேஸ்திரி பேரில் வாரம் தோறும் புகார்கள் எழுதி மேலிடத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். என்னைப் பற்றியும் அவருடைய ரிப்போர்ட்டில் ஏதாவது குறிப்புகள் இடம் பெற்று வந்திருக்கும். நிலைபெற்ற நினைவுகள் : 229