பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேஸ்திரி முத்துசாமி பிள்ளை விற்பனைக்கு உரிய பொருள்களை - மக்காச்சோளம் விதை போன்றவற்றை - சொந்த உபயோகத்துக்காகப் பதுக்கி ஒதுக்குகிறார். பிரசாரத்துக்காக ஊர்கள் தோறும் போவதாகச் சொல்லி, எங்கும் போகாமல், சொந்த ஊரிலேயே தங்கி, சொந்த விவசய அலுவல்களில் ஈடுபடுகிறார் என்ற ரீதியில் அமைந்திருந்தன அவரது கண்டனங்கள். மேஸ்திரியிடமிருந்து விளக்கம் கேட்டுக் கடிதங்கள் வந்தன. அவர் தனக்குத் தெரிந்த சமாதானங்களை எழுதிக் கொடுத்தார். ஆனாலும், அந்தோணிப் பிள்ளையின் குற்றச்சாட்டுகள் வலிமை பெற்றனவாகி, மேஸ்திரிக்கு பணிநீக்க உத்திரவு வந்தது. பாவம், முதியவர் ஓய்வு பெறுவதற்கு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் தானிருந்தன. அதற்குள் அவருக்கு சீட்டுக் கிழித்து அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தார் மேலதிகாரியான டிமான்ஸ்ட்ரேட்டர். அதில் அந்த ஆபீசருக்கு ஒரு வெற்றிப் பெருமிதம்! பிறகு, அவருக்குத் தெரிந்த ஒருவன், அவரது சிபாரிசின் பேரில், மேஸ்திரியாக நியமிக்கப்பட்டான். எனது செயல்களையும் ஆபீசர் மறைமுகமாகக் கவனித்து வந்தார் என்பது தெரிந்தது. நேரடியாக அவர் என்னிடம் எதுவும் கேட்பதில்லை. என்னைப் பற்றி மேஸ்திரியிடம் குறை கூறியிருக்கிறார். மேஸ்திரி பேச்சோடு பேச்சாக அதை என்னிடம் தெரிவித்தார். அந்தோணிப் பிள்ளையின் குணங்களும் செயல்களும் என்னுள் வெறுப்பை வளர்த்து வந்தன. எனது படிப்பும் எழுத்து முயற்சிகளும் குறைவின்றி நடந்து கொண்டிருந்தன. சென்னையில் திரு.வி.க.வின் நவசக்தி நிறுத்தப்பட்டது. திருவேங்கடம் நடத்திய பாரதசக்தியும் நின்றுவிட்டது. பாரதேவி நாளிதழ் பாரத தேவி என்ற பெயரில் ஒரு வாரஇதழையும் நடத்திக் கொண்டிருந்தது. அதன் ஆரம்பகட்டம் வெகுசிறப்பாக இருந்தது. ஆனந்த விகடன் மாதிரி, புத்தக அளவில் அது வெளியிடப்பட்டது. வ.ரா. என்று புகழ்பெற்றிருந்த வ. ராமஸ்வாமி அதன் ஆசிரியராகச் செயலாற்றினார். 'மணிக்கொடி எழுத்தாளர்களான கு.ப. ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா ஆகியோர் அதன் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். 23. 38 வல்லிக்கண்ணன்