பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவனிப்புக்குரிய கட்டுரைகள் சிறுகதைகளுடன் பாரததேவி வாரஇதழ் வெளிவந்தது. ஆயினும் அது வியாபார வெற்றி பெறவில்லை. வாரத்துக்கு வாரம் நஷ்டம் அதிகமாயிற்று. எனவே, நிர்வாகம் விரைவிலேயே வாரப் பதிப்பை நிறுத்திவிட்டது. நவசக்தி வார இதழ் நின்றுபோகவும், அதில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்த சக்திதாசன் சுப்பிரமணியன் 'பாரத தேவி அலுவலகத்தில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அவர் தனது பேச்சு சாமர்த்தியத்தினாலும், நம்பிக்கை ஊட்டும் திட்டங்களினாலும் பாரததேவி நிர்வாகத்தை சம்மதிக்க வைத்து வாரப் பதிப்பை மீண்டும் கொண்டு வர ஏற்பாடு செய்தார். அவரே அதன் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 'பாரத தேவி இதழின் புதிய பதிப்பு அகல வடிவம் பெற்றது. ஜனரஞ்சகமான கதைகள், கட்டுரைகள், துணுக்குகள், சினிமா விமர்சனங்கள் எல்லாம் அதில் இடம் பெற்றன. சக்திதாசன் எனக்குக் கடிதம் எழுதி, வாரம் தோறும் எனது கதையைப் பெற்று தொடர்ந்து வெளியிட்டார். எனது உற்சாகம் அதிகரித்தது. அதிகம் எழுதவேண்டும் என்ற உள்உந்துதல் என் மனசில் சதா அரித்துக் கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் தான் ஆபீசர் அந்தோணிப் பிள்ளை என்னைப் பற்றி மேலிடத்துக்கு எழுதிய ஏதோ ஒரு ரிப்போர்ட்டுக்கு விளக்கம் அளிக்கும்படி கேட்டு மேல் ஆபீசிலிருந்து கடிதம் வந்தது. ஆபீசர், மேஸ்திரி விஷயத்தில் செய்தது போல, இனி மேலும் மேலும் என்னைப் பற்றி ஏதாவது எழுதி, தொல்லை கொடுத்துக் கொண்டு தான் இருப்பார் எனக்கு இந்த வேலையிலேயே நீடிக்க வேண்டும் என்ற விருப்பமும் இல்லை; எழுத்துத் துறையில் வளர்ந்து முன்னேற வேண்டும் என்ற ஆசை அதிகரித்து வருகிறது. அதனால், இந்த வேலையை விட்டு விடலாம் என்று தீர்மானித்தேன். பக்கத்து வீட்டு வக்கீல் நண்பரிடமும் நிலைமையை சொன்னேன். மேல் ஆபீசுக்கு அனுப்புவதற்கான ஒரு பதிலை அவர் எழுதித் தந்தார். அதை என் கையெழுத்தில் எழுதி ஆபீசரிடம் கொடுத்தேன். அத்துடன் எனது ராஜிநாமாக் கடிதத்தையும் சேர்த்து அளித்தேன். நிலைபெற்ற நினைவுகள் : 231