பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்படிப்பட்ட ஒரு குழு பெருங்குளத்தில் நாடகங்கள் நடித்துக் காட்ட வந்தது. நாடகமேடை அமைத்து, அரங்கமாகக் கொட்டகைப் பந்தல் போடப்பட்டது. நாடகம் பார்க்கிறவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து தான் கண்டுகளிப்பார்கள். நாடகம் நடத்துவதற்கு முன்னதாக நாடகக் கான்ட்ராக்டர் ஊரின் பெரிய மனிதர்களை சந்தித்து வணங்கி, விஷயத்தை எடுத்துக் கூறி, உங்கள் ஆதரவு வேண்டும் என்று கேட்டுக் கொள்வார். அந்த ரீதியில் அவர் அப்பாவை சந்தித்து ஆதரவு கோரினார். நீங்கள் தினசரி வந்து நாடகம் பார்க்க வேண்டும் குடும்பத்தோடு வந்து பாருங்கள் என்று வேண்டிக்கொண்டார். நாடகம் ஒரு இரவு நடந்தால், அடுத்த இரவு நாடகம் கிடையாது. மூன்றாம் நாள் இரவு தான் புது நாடகம் நடத்தப்படும். இப்படி ஒரு மாத காலம் நாடகம் நடைபெற்றது. அப்பா அண்ணனையும் என்னையும் அழைத்துச் சென்றார். வேலைக்காரன், வீட்டிலிருந்து மூன்று நாற்காலிகளை எங்களுக்காக எடுத்து வந்தான். அவனும் நாடகம் பார்த்துக் கொள்ளலாம். வள்ளி திருமணம், பவளக்கொடி அல்லிஅர்ஜுனா, நல்ல தங்காள், சதாரம் போன்ற நாடகங்கள் நடித்துக் காட்டப்பட்டன. அத்தகைய நாடகங்களில் நடித்து அனுபவம் பெற்ற நடிகநடிகையர் நடித்தார்கள். அந்தக் காலத்தில் ஸ்பெஷல் நாடகங்களில் நடித்துப் பெயர் பெற்றிருந்த எஸ்.ஆர். கமலம், எஸ்.ஆர். கிருஷ்ணவேணி என்ற சகோதரிகள் ஸ்த்ரீ பார்ட் கிருஷ்ணவேணி ஆண்வேடம் தாங்கி, பாட்டுப்பாடி, நடிக்கவும் செய்வாள். இனிமையாகப் பாடியும், சமய சந்தர்ப்பத்துக்குத் தக்கபடி சொந்தமாக வசனம் பேசியும், பார்வை யாளர்களை வசீகரிக்கக் கூடிய திறமை பெற்றிருந்தாள் அவள். ஒரு நாடகத்தில் அவள் இளவரசன் வேடம் தரித்திருந்தாள். ஒரு காட்சியில் ஒரு ஆள் அவளுடன் வாதாடிக் கொண்டிருந்தான். அய்யா, உமது பேரென்ன என்று அவள் கேட்டாள். அவன் சொல்லாமல் கோணங்கித்தனம் பண்ணிநின்றான். முதல் வரிசைப் பிரமுகர் ஒருவர் அவன் பேர் மாமா - டாப்பர் மாமா என்று உற்சாகமாகக் குரல் கொடுத்தார். அவள் அவர் பக்கம் ஒரு பார்வை பார்த்தாள். மோகன முறுவல் பூத்தாள். ஆகா, மாமா - டாப்பர் மாமா! டாப்பரே, உம்மை நம்பின பேரெல்லாம் பாப்பரே என்று பாட்டுபோல் நீட்டிமுழக்கினாள். திடு : வல்லிக்கண்ணன்