பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கம் நெடுஞ்சாண்கிடையாகக் கீழே விழுந்து கும்பிட்டான். உள்ளதை சொல்லிடறேன், எசமான். என்னை அடிக்காதீங்க என்று கத்தினான். - சொல்லு என்று அடியை நிறுத்தினார் அப்பா. தன்னோடு உடந்தையாகச் செயல்பட்ட இரண்டு பேரைப் பற்றிச் சொன்னான் மாணிக்கம் அவர்கள் எங்கே இருப்பார்கள் என்றும் தெரிவித்தான். அங்கு ஒதுங்கி நின்ற சேவகர்களை அழைத்தார் அப்பா. இவன் காலையையும் கையையும் கயிற்றால் கட்டி, திண்ணை ஒரத்திலே உட்காரவையுங்க. அப்புறம் இவன் சொன்ன இடங்களுக்குப் போயி, இவன் குறிப்பிட்ட இரண்டு பேரையும் இழுத்திட்டு வாங்க என்று உத்திரவிட்டார். அவர்களும் அவ்விதமே செயல் புரிந்தார்கள். மாணிக்கத்தை கட்டி உட்காரவைத்து விட்டு வெளியேறிய சேவகர்கள் அரை மணி நேரத்தில் திரும்பி வந்தார்கள். அவர்களுடன் இரண்டு பேர் வந்து சேர்ந்தார்கள். என்ன ஏது என்று விசாரிக்காமலே, எடுத்த எடுப்பிலேயே சாட்டையால் அவர்களை விளாசினார் அப்பா. மாணிக்கம் இருந்த நிலையை பார்த்ததுமே அவர்களுக்கு விஷயம் புரிந்துவிட்டது. எசமான், மன்னிக்கணும் தெரியாமல் செய்துபோட்டோம் பொருள்களை திரும்ப சேர்ப்பித்து விடுகிறோம் என்று கும்பிட்டபடி, காலில் விழுந்தார்கள். அப்பா அடிப்பதை நிறுத்தினார். சாமான்கள் எல்லாம் எங்கே இருக்கு என்று கேட்டார். சேவகர்கள் கூட வந்தால், நான் எடுத்துத் தருகிறேன் என்று ஒருவன் சொன்னான். அப்பா சேவகர்களுடன் அவனை அனுப்பிவைத்தார். சிறிது நேரத்திலேயே, களவு போன பொருள்களுடன் சேவகர்கள் அவனையும் இட்டுக் கொண்டு வந்தார்கள். பொருள்களை அப்பாவிடம் அளித்தார்கள். தாசியும் அவள் மகளும் அங்கேயே தான் அமர்ந்திருந்தார்கள். அப்பா அவளுடைய பொருள்கள்ை அவளிடம் தந்தார். எல்லாம் சரியாக இருக்கா, பார்த்துக்கோ என்றார். நிலைபெற்ற நினைவுகள் : 67