பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் சந்தோஷமாகத் தான் போய்க் கொண்டிருந்தது. கோயில்களில் திருவிழாக்கள் நடந்தன. பெருமாள் கோயில் திருவிழா, சிவன்கோயில் திருவிழா, சாமி புறப்பாடு சப்பரத்தின் முன்னே ஆள்கள் தலைமீது தூக்கிச் செல்லும் கியாஸ் லைட்டுகள், கைத் தீவட்டிகள், சக்கரத் தீவட்டி சாமியை சுமந்து செல்லும் வாகனங்கள் - இப்படி எத்தனை எத்தனையோ வேடிக்கைக் காட்சிகள். காளிஅம்மான் கோயில் கொடை வேறு விதமான சந்தோஷங்களை கொண்டு சேர்க்கும். பெண் வேடமிட்டு ஆடும் ஆண்கள், கன்னியான் கூத்து, சாமி வந்து ஆடுகிற பூசாரி என்று பரவசப்படுத்தும். காளிகோயில் பூசாரி (உவச்சன்) மனைவி ஒரு குழந்தை பெற்றெடுத் தாள். அதன் முகம் விசித்திரத் தோற்றம் கொண்டிருந்தது. பிள்ளை நரசிம்மம் போலத் தோணுது: சிங்க முகம் மாதிரி இருக்குது அதன் மூஞ்சி என்று குழந்தையைப் பார்த்தவர்கள் சொன்னார்கள். அது தோஷம், குடும்பத்துக்கு ஆகாது. தோஷம் நீங்க வேண்டும் என்றால், பிள்ளையை கழுவிலே ஏத்தி இறக்கணும் என்று சிலர் கூறினர். கழுவிலே ஏத்திறதுன்னா, நிசமாவே கழுமரத்திலே குத்தி எடுக்கறது இல்லே சும்மா தோஷத்தை போக்கடிக்க பிள்ளையை கழு முனை கிடத்தி எடுத்திரனும் என்றும் விளக்கினார்கள். . நாள் குறிப்பிட்டு அவ்விதமே செய்யப்பட்டது. ஆடிமாதம் ஒரு செவ்வாய் கிழமை, அம்மன் சப்பரத்தில் புறப்பட்டு வந்தாள். அந்தி மயங்கும் நேரம் காளி கோயிலுக்கு எதிரே உள்ள முச்சந்தியில் கழு நாட்டப்பட்டிருந்தது. தடிமனான ஒரு பெரிய ஈட்டி தான் கழுமரம்' அந்த ஈட்டி முனைமீது சிறு மெத்தை போன்ற துணிச்சுருள் வைக்கப் பட்டு, அதன் மேல் வேப்பங்குழை மிகுதியாக அடுக்கப்பட்டிருந்தது. அதில் குழந்தையை படுக்க வைத்தார்கள். அதன் உடம்பு, முகம் முழுவதும் திருநீறு பூசப்பட்டிருந்தது. நெஞ்சிலும் முகத்திலும் குங்குமக் குழம்பு தடவப்பட்டு, ரத்தம் போல் சிவந்து காணப்பட்டது. குழந்தை வீரிட்டு அழுதது. அதன் விகாரமுகம் மேலும் அதிக விகாரத் தன்மை பெற்று கோரமாகத் தோன்றியது. அம்மனுக்கு சூடன் தீபாராதனை நடந்தது. சூடன் தட்டிலிருந்து எடுக்கப்பெற்ற திருநீறு குழந்தையின் முகத்தில் இடப்பெற்றது. நிலைபெற்ற நினைவுகள் 3; 77