பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயிலைச் சார்ந்து கட்டளை அய்யர்கள் என்று சிலர் வாழ்க்கை நடத்தினார்கள். அவர்களில் ஒவ்வொருவர் ஒவ்வொரு ஊருக்குப் போய் முக்கிய குடும்பங்களை அணுகி, திருச்செந்தூர் கோயிலில் மாதாமாதம் உங்கள் பெயரால் அர்ச்சனை நடத்தி பிரசாதம் அனுப்புவோம். நீங்கள் திருச்செந்தூர் வருகிற போது உங்களுக்கு தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்து, உங்களை சன்னிதிக்கு அழைத்துப் போய் சவுகரியமாக சாமி தரிசனம் பண்ண உடனிருந்து உதவுவோம் என்று கூறி, நெல் அரிசி பணம் என்று வாங்கிச் செல்வார்கள். மாதம் தோறும் தபாலில் இலைவிபூதி பிரசாதம் அனுப்பிவைப்பார்கள். அவர்கள் வசூலுக்கு வருகிற போது கட்டுகட்டாக இலைவிபூதி அளிப்பார்கள். எங்கள் வீட்டுக்கும் அப்படி ஒரு கட்டளை அய்யர் இருந்தார். முக்காணி அய்யர். திருச்செந்தூர் கோயிலில் முக்காணி ஊரைச் சேர்ந்த பிராமணர்கள் தான் அதிகம் பணிவிடை செய்து, பூஜை பண்ணிக் கொண்டிருந்தார்கள். முன்குடுமி வளர்த்து தலையில் முன்னே முடிச்சு போட்டு வைத்திருப்பார்கள். நாங்கள் போனபோது திருச்செந்தூரில் கட்டளை அய்யர் அவர் வீட்டிலேயே தங்குவதற்கான வசதிகள் செய்து தந்தார். அப்போது திருச்செந்தூர் சாதாரண கிராமமாகத் தான் இருந்தது. இப்போதும் ஊர் விசேஷமாக வளர்ந்து விடவில்லை. கோயிலைச் சுற்றிலும் நவீன வளர்ச்சிகள் அதிகம் ஏற்பட்டுள்ளன. - அந்நாள்களில் (1920களில்) கோயில் இயற்கைச்சூழலோடு எழிலுற விளங்கியது. சுற்றுப் பிரகார மண்டபங்கள், கல்தூண்கள், காங்கிரீட் தளங்கள் எல்லாம் கிடையா. தங்கும் விடுதிகள், லாட்ஜுகள் இல்லவே இல்லை. நாழிக் கிணறு மணல் பகுதியில், வெட்டவெளியில் தனித்து இருந்தது. வள்ளி ஒளிந்த குகை என்பது அதன் இயற்கைத் தன்மையோடு - செயற்கைக் கட்டுமானங்கள் இல்லாமல் - பயங்கரச் சூழ்நிலை கொண்டிருந்தது. அதற்குப் போவதற்கு அலையாடும் கடல் பரப்பில் நடந்து கடந்தாக வேண்டும் அலைகள் எழுந்து வந்து காலில் மோதித் திரும்பும் மணல் காலை அரிக்கும். கால ஓட்டத்தில் எல்லாம் மறைந்து போயின. சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதி கான்க்ரீட் தளம், கல்தூண்கள், மண்டபங்கள் எங்கெங்கும் ஆக்கிரமித்து விட்டன. நாழிக் கிணறு அதன் தனித் தன்மையை, சிறப்பை இழந்துவிட்டது. கதவு - பூட்டுத்திறப்பு படி நிலைபெற்ற நினைவுகள் கீ 81