பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னும் தொண்டர்கள் குழு சூழ கார் நகர்ந்துவிட்டது. காந்தியை பார்த்தேன் என்று சொல்ல முடிந்ததே தவிர, அவர் முகமும் உருவமும் என் மனசில் நன்கு பதிவாகவில்லை. பிறகு படங்கள் மூலம் தான் காந்திஜியை நன்றாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு நாள்கள் இனிமையாகப் போய்க்கொண்டிருந்தன. பள்ளிக்கூட வாழ்க்கை விசேஷ நிகழ்வுகளின்றி சாதாரணமாக அமைந்திருந்தது. பெருங்குளம் பள்ளிக்கூடத்தில் இரண்டாவது, மூன்றாவது வகுப்புகளில் படித்துத் தேர்ந்தேன். இரண்டாவது வகுப்பில் ஞானசம்பந்தம் என்பவர் வாத்தியாராகப் பாடம் கற்பித்தார். நல்ல மனிதர். அவர் பேசுகிற போது வாயின் இரண்டு பக்கங்களிலும் எச்சில் நுரைத்து நிற்கும். அதனால் பெரிய வகுப்புப் பையன்கள் அவரை சாளவாய் ஞானசம்பந்தம் என்று குறிப்பிடுவது வழக்கம் சிலநாள்களில் அவர் சட்டை அணியாமல், பெரிய வெள்ளைத் துண்டை உடம்பில் போர்த்தியபடி வகுப்புக்கு வருவார். மூன்றாம் வகுப்பு வாத்தியார் முறப்பநாடு ஊர்காரர். சண்முக கந்தரம் என்று பெயர். அவர் காகிதத்திலும், அட்டைகளிலும் படங்கள் வரைவார். மாயக்கூத்தன், கிளி, மயில் என்று சித்திரங்கள் தீட்டி, பல வர்ணங்கள் பூசி, பிள்ளைகளுக்குக் கொடுப்பார். அதனால் நீண்ட அட்டைகளை அவரிடம் கொடுத்து, படம் வரைந்து தரும்படி பையன்கள் கெஞ்சுவார்கள். அந்த வகுப்பில் இரண்டு பிராமணப் பெண்களும் படித்தார்கள். அச்சிறுமிகள் வாத்தியாரிடம் சகஜமாகப் பேசிப் பழகினார்கள். அவர்களுக்கு அவர் அதிகமான படங்கள் வரைந்து தந்தார். அவரது ஊர் முறப்பநாடு என்பதனால் ஒரு பெண் கேலியாக, வல்லநாடு முறப்பநாடு, வாழவைத்த தோப்பு நாடு என்று நீட்டி நீட்டிச் சொன்னாள். அவர் பதிலுக்கு பிச்சை எடுத்தான் பெருங்குளம் என்று வசையாகச் சொன்னார். நீங்க பெருங்குளத்திலே தானே வேலை பார்க்கறிங்க என்று கூறி, அந்தப் பெண் மூஞ்சியை சுழித்துப் பழிப்புகாட்டியது. அவர் சிரித்தார். கோபிக்கவில்லை. 84. 98 வல்லிக்கண்ணன்