பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 & நிலைபெற்ற நினைவுகள் திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோடில் ஜோதி நிலையம் என்ற பதிப்பகம் இருந்தது. அ.கி. ஜயராமன் நடத்திய புத்தக வெளியீட்டு நிறுவனம் அது. அவர் இந்தியிலிருந்து மொழி பெயர்த்த நாவல்களையும் நாடகங்களையும் தொடர்ந்து வெளியிட்டார். க.நா.சுப்ரமண்யம், புதுமைப்பித்தன் முதலியவர்களது படைப்புகளையும் புத்தகங்களாக்கினார். சர்வதேசக்கதை மலர்கள் என்று பலநாடுகளின் கதைகளையும் தமிழாக்கி எட்டனா விலையில் ஜோதி நிலையம் வெளியிட்டு வந்தது. தரமான இலக்கிய வெளியீடுகள் அவை. நான் அ.கி. ஜயராமனை சந்தித்தேன். சினிமா உலகம்’ பி.எஸ்.செட்டியார் மூலம் அவர் என்னைப் பற்றி அறிந்திருந்தார். கலைமகளில் வந்த எனது கதைகளையும் அவர் படித்து ரசித்திருந்தார். அவர் என்னை வரவேற்று அன்புடன் உரையாடினார். புத்தகங்கள் தந்தார். ஜோதி நிலைய வெளியீடுகள் எனக்குத் தொடர்ந்து அன்பளிப்பாகக் கிடைத்துக் கொண்டிருந்தன. அ.கி.ஜ.வின் அன்பளிப்பு நூல்கள் வெகுகாலம் வரை வந்து எனது நூல் நிலையத்தை வளம் செய்தன. ஆங்கில நூல்கள் படிப்பதற்கு கே. ராமநாதன் உதவி புரிந்தார். "யுனிவர்சிட்டி லைபிரரியில் புத்தகங்கள் எடுத்துப் படிக்கலாம். ஒரு நண்பர் கார்டு வைத்திருக்கிறார். அவர் அதை உபயோகிப்பதில்லை. நான் அந்தக் கார்டை வாங்கித் தருகிறேன். நீங்கள் ரஷ்ய இலக்கியங்களை விருப்பம் போல் எடுத்துப் படிக்கலாம் என்று கூறினார். அவ்வாறே டி. செஞ்சையா என்பவரின் லைபிரரி கார்டை வாங்கி வந்து என்னிடம் தந்தார். தான் யுனிவர்சிட்டி லைபிரரிக்குப் போய், டாஸ்டாவ்ஸ்கியின் "க்ரைம் அன்ட் பனிஷ்மென்ட் நாவலை எடுத்து வந்து படித்தேன். அடுத்து, இவான் துர்கனேவ் நாவல்களைத் தேடி எடுத்தேன். அப்புறம் புஷ்கின் படைப்பு ஒன்றை எடுத்து வந்தேன். திடீரென்று ஒருநாள், அப்படி புத்தகம் எடுத்து வந்தபோது 'நீங்கள் தான் டி.செஞ்சையாவா?’ என்று நூலகர் கேட்டார். இல்லை; அவருக்காக நான் புத்தகம் எடுக்கிறேன் என்றேன். 'அப்படியானால் அடுத்த முறை செஞ்சையாவிடமிருந்து கடிதம் வாங்கி வரவேண்டும்’ என்று நூலகர் தெரிவித்தார்.