பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 * நிலைபெற்ற நினைவுகள் அருகில் இருந்த செட்டிகுளம் என்ற ஊரில் கோயில் நிர்வாக அதிகாரியாக அவர் பொறுப்பு வகித்தார். கோயில் சம்பந்தமான வழக்குகள் துறையூர் முனிசிப் கோர்ட்டில் நடைபெறும். அவ் வழக்குகளின் விசாரணையின்போது அவர் கோர்ட்டுக்கு வரவேண்டியது அவசியமாயிற்று. அப்படிக் கடமையாற்று வதற்காக பிச்சமூர்த்தி அடிக்கடி துறையூர் வந்து போனார். அப்போதெல்லாம் அவர் அ.வெ.ர.கி. ரெட்டியார் வீட்டில் தங்கினார். இரண்டு மூன்று நாள்கள் கூட அவர் தங்குவது உண்டு. அப்போதெல்லாம் அவர் ஊழியன் அலுவலகத்துக்கு வந்து வெகுநேரம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். 1936 முதலே நான் ந.பிச்சமூர்த்தியின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தேன். மணிக்கொடி பத்திரிகையில் வெளிவந்திருந்த அவருடைய சிறுகதைகளும் வசனகவிதைகளும் என்னை வசீகரித்திருந்தன. 1937ல் 'தினமணி ஆண்டு மலரில் இடம் பெற்றிருந்த பிr' வின் கிளிக்கூண்டு’ எனும் வசனகவிதை என்னில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்தியது. நானும் கவிதை எழுத வேண்டும் என்ற உந்துதலை அது என்னுள் ஏற்படுத்தியது. ஆகவே பிச்சமூர்த்தியின் அறிமுகமும் அவருடன் பேசிப் பழகக் கூடிய வாய்ப்பும் கிட்டியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. கழுத்து வரை தொங்கும் தலைமுடியும் நீண்ட தாடியுமாக அவர் ஒரு ரிஷிபோல் காட்சியளித்தார். அவருடைய முகத்தோற்றம் கவி தாகூரின் சாயலைக் கொண்டிருந்தது. ஆனால் தாகூர் நல்ல உயரம். பிr உயரமானவரில்லை. அவர் என்னிடம் சகஜமாகப் பேசிப் பழகினார். வயது வித்தியாசம் பாராட்டாமல் இனிய நண்பராகவே அவர் நடந்து கொண்டார். ஊழியன் இதழுக்குத் தொடர்ந்து கவிதைகள், கட்டுரைகள் எழுதி உதவினார். மனநிழல்' என்கிற புதுமையான கதையும் அல்லாத கட்டுரையும் இல்லாத, ஆயினும் இரண்டின் தன்மைகளையும் கொண்டிருந்த வாழ்க்கைச் சித்திரங்களை அதிகம் எழுதித் தந்தார். கிராம ஊழியன் பொங்கல் மலர் மூலம் விளம்பர வருமானம் கிடைத்திருந்தது. அதனால், ஆண்டு மலர் எனச் சிறப்பு மலர் ஒன்றைத் தயாரித்து விளம்பரங்கள் அதிகம் சேகரிக்கலாம், அதன் வாயிலாக பத்திரிகையின் வருமானத்தை அதிகப்படுத்தலாம் என்று திருலோகம் யோசனை கூறினார். ரெட்டியார் அதை ஏற்றுக் கொண்டார். மலருக்கான ஆரம்ப வேலைகள் உற்சாகமாகத் தொடங்கப்பட்டன.