பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ; 127 மாடல் கார்கள், மோட்டாருக்குத் தேவையான பாகங்கள் என்று ஏகப்பட்ட தயாரிப்புகளை அவர் உருவாக்கினார். அவை மலிவான விலையில் சந்தைக்கு வந்து மக்களுக்கு உதவுவதற்கு வகை செய்தார். ஆனால் அரசாங்கம் அவற்றை அங்கீகரிக்கவில்லை; அவருக்கு ஆதரவு தரவுமில்லை. மாறாக அவரது தயாரிப்புகளுக்கு மிகக் கடுமையான வரிகளை விதித்தது. அவர் வரிகட்ட மறுத்தார். அரசாங்கத்தோடு போராடினார். நாயுடு இறுதியில் அவரது கண்டுபிடிப்புகள் அனைத்தையும் அவரே சுத்தியலால் அடித்து நொறுக்கி அழித்தார். அப்படி அழித்து ஒழிப்பதற்கு முன்னதாக அவற்றைக் கண்காட்சிப் பொருள்களாக்கி மக்களின் பார்வைக்கு வைத்தார். 'அழிக்கப்படுவதற்காகவே செய்யப்பட்ட ஆக்கங்கள் என அவை காட்சிப்படுத்தப்பட்டன. CONSTRUCTION FOR DESTRUCTION என்று பெரிதாக எழுதிவைக்கப் பட்டிருந்தது அந்தக் கண்காட்சியில். ஜி.டி. நாயுடு இலக்கிய ஆர்வம் உடையவராகவும் இருந்தார். எழுத்தாளர்களுக்கு மனமுவந்து உதவிகள் புரிய அவர் தயங்கியதில்லை. அந்த அதிசய மனிதர் எழுத்தாளர்களின் முதலாவது மாநாட்டுக்கும் தாராளமாகப் பொருளுதவி செய்தார். முதல் எழுத்தாளர் என்று அந்நாள்களில் பெருமைப் படுத்தப்பட்டிருந்த, வ.ரா.எனும் இரண்டு எழுத்துப் பெயரால் நன்கு அறியப்பட்டிருந்த, வராமஸ்வாமி மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். தினசரி நாளிதழின் ஆசிரியர் டிஎஸ் சொக்கலிங்கம் சிறப்புரை ஆற்றினார். எழுத்தாளர்கள் பலர் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எழுத்தாளர்கள் அனைவரும் தங்களைத் தாங்களே அறிமுகம் செய்து கொண்டது மாநாட்டின் சுவாரசியமான சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. சிலர் புதுமையாகவும் ரசமாகவும் தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள். ஒரு எழுத்தாளர், ‘நான் எழுதியுள்ள கதைகள் கட்டுரைகள் கவிதைகள் பலப்பல பலபல, பலபல பலப்பல என்று அடுக்கினார் ஆனால் அவற்றில் பலப்பல பலபல அச்சில் வரவேயில்லை என்றார். 'பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண துரைக்கண்ணன், 'துரதிர்ஷ்ட எழுத்தாளர்கள் வரிசையில் முதலில் நிற்பவன் நான்’ என்று தனது அறிமுகத்தைத் தொடங்கி, தான் எழுத்துலகில் உரிய கவனிப்பு பெறாமல் இருந்ததைக் குறிப்பிட்டார்.