பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் : 141 அவருடைய நண்பர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். அவர்களில் ஒருவர் சொன்னது சிதம்பரத்துக்குப் பிடித்திருந்தது. 'உன்னுடைய கவிதைகளை புத்தகமாகக் கொண்டு வருவது நல்ல யோசனை தான். அதன் மூலம் உனக்கு கவனிப்பு கிடைக்கும் சரிதான். உன் புத்தகத்தை கொண்டு வருவதற்கு முன்னதாக, எழுத்துலகில் பெயர் பெற்ற ஒருவரின் எழுத்துக்கனை புத்தகமாக வெளியிட வேண்டும். அதன் துணையோடு வெளிவந்தால், உன் புத்தகமும் நல்ல கவனிப்பு பெறும் என்று அந்த நண்பன் கூறினான். அது நல்ல யோசனை எனப்பட்டது சிதம்பரத்துக்கு, தனக்குத் துணைவரக்கூடிய எழுத்தாளர் யார் இருக்கிறார் என்று நினைத்துப் பார்க்கையில் வல்லிக்கண்ணன் நினைவுதான் அவருக்கு வந்தது. எனவே அவர் உடனடியாகப் புறப்பட்டு துறையூர் வந்து சேர்ந்தார். நான் அவருக்குக் கதைகள் கொடுத்தேன். ‘நாட்டியக்காரி என்ற கதைத் தொகுப்பை அவர் கவிக்குயில் நிலையம்’ வெளியீடாகக் கொண்டு வந்தார். கூடவே தனது கவிதைகளை ‘காதலிக்கு என்ற தொகுப்பாகப் பிரசுரித்தார். 'வைரம் என்ற பெயரில் எஸ்.சிதம்பரம் எழுதிய கவிதைகள் தொடர்ந்து கிராம ஊழியன்’ இதழ்களில் இடம் பெற்றன. மேலும் கவனிப்பு பெறுவதற்காக இலக்கிய மலர் ஒன்று தயாரித்து வெளியிடலாம் என்று அவருக்கு யோசனை கூறினேன். 'கவிக்குயில்’ என்ற பெயரில், பெரிய அளவில், ஒரு மலர் வெளியிடும் முயற்சியில் சிதம்பரம் மும்முரமாக ஈடுபட்டார். அவருக்காக நான் முக்கிய எழுத்தாளர்கள் பலருக்கும் கடிதங்கள் எழுதினேன், மலருக்கு விஷயங்கள் கேட்டு. எழுத்தாள நண்பர்கள் அன்புடன் ஒத்துழைத்தார்கள் கவிக்குயில் முதலாவது மலர் நன்கு உருவாகி வெளிவந்தது. அதில் என்னுடைய எழுத்துக்கள் அதிகமாகவே இருந்தன. மலரின் வெற்றியைக் கண்ட சிதம்பரம் இரண்டாவது கவிக்குயில் மலர் வெளியிடுவதில் உற்சாகம் காட்டலானார். முதல் மலரைப் பார்த்து திருப்தி அடைந்த எழுத்தாளர்கள் பலரும் கதைகள் கட்டுரைகள் கொடுத்து உதவினார்கள். புதுமைப்பித்தன் நீண்ட கவிதை ஒன்று அளித்தார். இரண்டாவது மலர் முதல் மலரைவிடச் சிறப்பாக அமைந்திருந்தது. இரண்டு மலர்களும் திருவனந்தபுரத்தில் இருந்துதான் வெளியிடப்பட்டன.