பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 3 15 பின்னர், மறுமலர்ச்சி இலக்கியத்தில் நாட்டம் கொண்டிருந்த எழுத்தாளர்கள் பலரும் கலைமகளில் எழுதுவதில் உற்சாகம் தாட்டினார்கள். ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், புதுமைப்பித்தன், ந. சிதம்பரசுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா, க.நா. சுப்ரமண்யம் கதைகள் அடிக்கடி கலைமகளில் இடம் பெற்றன. புதுமைப்பித்தன் எழுதிய மிகச் சிறப்பான சிறுகதைகள் பலவும் காஞ்சனை, மகாமசானம், அன்று இரவில், கடவுளும் கந்தசாமிபிள்ளையும், செல்லம்மாள் - கலைமகளில் தான் வெளிவந்தன. வேறு போக்குகளில் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களின் கதைகளும் கலைமகளில் இடம் பெற்றன. அன்றைய இலக்கியப் பத்திரிகைகளின் தரத்தை மதிப்பிட்டு, மூன்று வகையான இலக்கியப் போக்குகள் காணப்படுகின்றன என்று கு.ப. ராஜகோபாலன் ஒரு கட்டுரை எழுதினார். அந்நாள்களில் போக்கு என்பதை மனோபாவம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். முதலாவது, விகடன் மனோபாவம். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிப்பது. வாழ்க்கையில், மனித சமூகத்தில், நிலவுகிற துன்ப துயரங்களைக் காணமறுத்து, மேலோட்டமாக விஷயங்களைக் கவனிப்பது எதையும் ஹாஸ்யமாகவே எழுதுவது. இரண்டாவது, அதற்கு நேரிடையான மணிக்கொடி மனோபாவம். இது வாழ்க்கையின் சகல பிரச்சனைகளையும் அடி ஆழம் வரை கண்டு, உணர்ச்சிகளை முக்கியமாக்கி, கனமான எழுத்துகளைப் படைப்பது, சோதனை ரீதியில் எழுதுவதில் நாட்டம் கொள்வது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட போக்கும் காணப்பட்டது. மேலே சொல்லப்பட்ட இரு போக்குகளையும் ஒரளவுக்கு ஏற்றுக் கொண்டு, இருவகை எழுத்துக்களையும் வரவேற்று ஆதரிப்பது, மிதவாதப் போக்கு கொண்டது. இதை 'கலைமகள் மனோபாவம்' என்று கூறலாம். இந்த வகையில் கருத்துக் கூறி விவரித்து கட்டுரை எழுதியிருந்தார் கு.ப. ராஜகோபாலன். பெயர்பெற்ற மணிக்கொடி எழுத்தாளர்களின் கதைகளோடு எனது கதைகளையும் ஏற்று 'கலைமகள் வெளியிட்டு வந்தது என் சந்தோஷத்தை அதிகப்படுத்தியது.